Header Ads



பிறருக்கு உதவி செய்வதற்கும், அல்லாஹ்வின் அருள் வேண்டும்...


இக்கட்டான நிலையில் இருப்போருக்கு உதவி செய்வதை நாம் லேசாக நினைக்கிறோம்.


காலத்தே ஒருவருக்கு நாம் செய்யும் உதவி நாம் காலமான பின்பும் நமக்கு பலன்தரும்.


அண்மையில் எனக்கு நெருக்கமான ஒருவரின் வாழ்க்கையிலிருந்து எனக்கு ஒரு படிப்பினை கிடைத்தது.


அவர் படிக்கும்போது அவரின் தந்தை பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார்.


கல்லூரி இறுதியாண்டில் கல்லூரிக்கான கட்டணம் செலுத்த இயலாத நிலையில், தனது தந்தையி்ன் உறவினரிடம் சென்று பொருளாதார உதவி கேட்க அவரும் மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்துதவினார்.


படித்தார்,பட்டம்பெற்றார், நல்ல ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.


தனது கடும் உழைப்பால் பதவி உயர்வு அடைந்து இன்று கைநிறைய ஊதியம் பெற்று பொருளாதார வசதியுடன் வாழ்கிறார்.


இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் அவரின் உறவினரி்ன் மகன் ஒருவன் கல்லூரி கட்டணம் செலுத்த வழியில்லாமல் கடனாக பணம் தந்துதவுமாறு அவரிடம் வந்தான்.


அந்த உறவினனின் மகனைப் பார்த்தவுடன் அவர் மனதில் தனது கடந்த கால நிலமையும் தனக்கு சரியான நேரத்தில் உதவிய அந்த உறவினரின் முகமும் நினைவிற்கு வந்தது. 


"அன்று அல்லாஹ் அவரின் மூலம் செய்த உதவியால் தானே இன்று இந்நிலைமைக்கு-மற்றவர்களுக்கு உதவும் நிலமைக்கு வந்தோம்"


 என எண்ணுகிறார்.


அவருக்கு மனதி்ற்குள்ளே நன்றி சொல்லிய வண்ணம் மறுப்பேதும் சொல்லாமல் அவனுக்குப் பணம் கொடுத்தனுப்பினார்.


இங்கேதான் நாம் சிந்திக்கவேண்டிய விடயம்.


இருபத்தைந்து வருடத்திற்கு முன் பணம் கொடுத்தவர், தாம் அளித்ததை மறந்திருக்கலாம் ஏன் அவர் மரணித்துமிருக்கலாம், ஆனால் அவர் செய்த உதவிக்காக ஒருவர் இன்று நன்றி செலுத்துகிறார், அவரின் வழியில் மற்றொருவருக்கு உதவுகிறார்.


இப்பொழுது இவருக்கு உதவியவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன.


 இவரால் பலனபெற்றவர், பலன்பெற்றவரால் பலன் பெற்றவர் என அனைவருக்கும் உதவிய நன்மை முதலாமவருக்கு கிடைக்கிறது.


இது போன்ற ஒரு'சதகத்துன் ஜாரியா' செய்கின்ற வாய்ப்பை எல்லா செல்வந்தர்களுக்கும் அல்லாஹ் தந்துவிடுவதில்லை.


கல்விக்காக,தொழில்முதலீடுக்காக, பணியில் சேர என ஒருவரின் வாழ்க்கையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேவைக்காக உங்களிடம் உதவி கேட்டால் கொடுக்க முயற்சி செய்யுங்கள். கடனாக கொடுத்தாலும் அதுவும் தர்மம்தான்.


அவர்கள் உங்களுக்காக செய்யும் துஆ


அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாவல் அரணாக அமையும் இன்ஷாஅல்லாஹ்.


- கணியூர் இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயிகாசிமி -

No comments

Powered by Blogger.