இறக்குமதி செய்யப்பட்ட ஊசிகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்
குறித்த நிறுவனம், 22,500 குப்பிகள் அடங்கிய நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதுடன், 130 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் திணைக்களம், அண்மையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்ததையடுத்து, சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணிப்பாளர் என கூறப்படும் 57 வயதான சுதத் ஜானக பெர்னாண்டோ நேற்று (31) பிற்பகல் கொம்பனித்தெரு பிரதேசத்தில் குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சீதுவ, ரத்தொலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளது.
விநியோகஸ்தரால் 14 முறை மருத்துவ வழங்கல் பிரிவுக்கு 3,985 டோஸ் தடுப்பூசிகளை விநியோகத்துள்ளதாகவும் அதற்காக அவருக்கு மூன்று கோடியே அறுபத்து மூன்று லட்சத்து எண்பத்து மூவாயிரத்துக்கும் மேல் பணம் கொடுத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பயன்பாட்டிற்கு தடுப்பூசிகளை வெளியிடும் போது மருந்து ஒழுங்கப்படுத்தல் அதிகாரசபை தர சோதனையை கூட மேற்கொள்ளவில்லை எனவும், சுமார் 80% தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வாமை ஏற்பட்டமை பதிவானதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரே எனவும், இதில் தொடர்புடைய முக்கிய பொறுப்பாளர்கள் அரச பணியாளர்களாக இருக்கலாம் எனவும் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
எனவே இந்த விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று உடனடியாக சந்தேக நபர்கள் அனைவரையும் தரம் பாராமல் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதான சந்தேகநபரின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Post a Comment