Header Ads



இஸ்லாமிய மதப்போதகர்களிடமும், முஸ்லிம்களிடமும் ACJU விடுத்துள்ள வேண்டுகோள்


கடந்த 2023.11.09 ஆம் திகதி முஸ்லிம் மதப்போதகர் ஒருவரினால் பரத நாட்டியம் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியையும், பின்னர் அது தொடர்பில் தான் மன்னிப்பு கேட்பதாக வெளியிடப்பட்ட காணொளியையும் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்ததுடன், குறித்த மதப்போதகரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து நாட்டில் உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.


இவ்வாறு மதம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும், கண்டனத்துக்குரியதுமாகும்.


அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் கூறுகின்றான்:


"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக…"  (16:125)


"அல்லாஹ் அல்லாதவற்றை (மற்ற மதத்தவர்களுடைய தெய்வங்களை) நீங்கள் திட்டாதீர்கள்…" (6:108)


எனவே, மேற்குறிப்பிடப்பட்ட அல்-குர்ஆனின் அழகிய போதனைகளை தமது வாழ்வில் கடைப்பிடிக்குமாறும், அல்-குர்ஆன், அஸ்ஸுன்னா மற்றும் இமாம்களின் வழிகாட்டலின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட மன்ஹஜை (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) அடிப்படையாக வைத்து தங்களது போதனைகளை அமைத்துக் கொள்ளுமாறு குறிப்பாக இஸ்லாமிய மதப்போதகர்களையும், பொதுவாக ஏனைய முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வினயமாக வேண்டிக் கொள்கின்றது.


முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி


தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.