Header Ads



தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக இம்தியாஸ் Mp முறைப்பாடு


பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்று(03.10.2023) பாராளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.


சபாநாயகர் அவர்களே,


சிறப்புரிமை மீறல் குறித்த எனது கேள்வியை எழுப்ப இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.


நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனது கடமைகளை செய்வதில் காட்டப்படும் பாரபட்சம், தடை ஏற்படுத்தல்கள்,எதிர்ப்பு காட்டுதல் போன்றே பாராளுமன்றத்தின் கடமைகளை செய்யும் அரசியலமைப்பு சபையின் உத்தரவை புறக்கணித்தல் போன்றன பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளையும், பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளும் மீதான சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை கடுமையாக மீறுவதாகும்.


இதற்காக உங்களையோ அல்லது செயலாளர் நாயகத்தையோ அல்லது வேறு யாரையும் நோக்கி விரல் நீட்டவில்லை, பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு இவ்வாறு சவால் விடுவது மற்றும் புறக்கணிப்பது, பாராளுமன்றத்தின் பக்கச்சார்பற்ற நடத்தையை கேள்விக்குள்ளாக்குவது போன்றன எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், இவைகள் பற்றி நிறைய ஆய்வு செய்து, சிந்தித்ததன் பிறகே இவ் விடயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர முடிவு செய்தேன்.


கௌரவ சபாநாயகர் அவர்களே,


நாடாளுமன்ற உறுப்பினராக நான் முதன்முறையாக முன்வைத்த இவ் இளைஞர் பிரதிநிதித்துவம் பற்றிய சட்டமூலம் தொடர்பாக செயலாற்றிய முறையினால், 1988 ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய நான்.இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்த உயர் சபையாகிய பாராளுமன்றத்தில் எனது கடமைகளை செய்யும் போது வேண்டுமென்றே அதற்கு தடங்கள் ஏற்படுத்தி, இழிவு படுத்துவதனூடாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சிறப்புரிமைகள் பாரதூரமாக மீறப்படுவதையிட்டு உங்களுக்கு முறையீடு செய்ய வேண்டி இருப்பதையிட்டு வருந்துகிறேன்.



Parliament powers and privileges Act எனப்படும் பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் அட்டவணையின் " பகுதியின் பிரிவு 1, 2 மற்றும் 4 க்கு உங்கள் கவனத்தை திருப்ப விரும்புகிறேன்.


இதன்படி, இந்த விவகாரம் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் சிறப்புரிமை மீறலுக்கு அப்பாற்பட்ட,பாராளுமன்றத்தின் நன்மதிப்பிற்கு,பக்கச்சார்பற்ற தன்மைக்கு, சுயாதீன தன்மையை அவமதிக்கும் ஓர் நிலைமையாகும்.


நாடாளுமன்றத்தின் சார்பிலும் உங்கள் சார்பிலும் செயல்படும் நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை  நிலையியற் செயற் குழுவின் உத்தரவுகளை தொடர்ந்து நிறைவேற்றத் தவறுவது நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு வேண்டுமென்றே சவால் விடுவதாக அமையாதா? அது ஓர் இழிவு படுத்தல் இல்லையா? இது மிகத் தெளிவான விடயமாகும்.


கௌரவ சபாநாயகர் அவர்களே,


பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க,பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் கட்டளைச் சட்டங்களை திருத்துவதற்காக,நான் மூன்று தனிநபர் சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக,பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளருக்கு 2021 ஜனவரியில் சமர்ப்பித்தேன்.


எனது இந்த மூன்று தனிநபர் பிரேரணை சட்ட வரைவுகளும்,உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் போன்ற மக்கள் பிரதிநிதிகளை கொண்ட இந்த முக்கியமான கேந்திர இடங்களில் நியாயமான இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவையே.


இந்த மூன்று வரைவுச் சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,பின்னர் ஜூலை 6, 2022 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி சம்பந்தப்பட்ட அமைச்சினால் அது தொடர்பான அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.இதன்படி, அது சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பப்பட்ட போதிலும்,அந்த சட்டமூலங்களுக்கான உரிய அறிக்கைகள் 2023 ஜனவரி முதல் நாள் வரை பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை.



பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 52(7)இன் பிரகாரம் குறித்த சட்டமூலங்களுக்கான அறிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் இருந்து ஆறு மாதங்களுக்குள் கிடைக்கப்பெறவில்லையென்றால்,மேற்படி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பிற்கான ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்க முடியும். அதன்படி, பாராளுமன்றம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான எனது தனிநபர் உறுப்பினர் சட்டமூலங்களை ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்குமாறு 2023 ஜூன் 06 ஆம் திகதிய கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் கோரினேன். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், செப்டம்பர் 22, 2023 திகதியிட்ட கடிதத்தின்  மூலம் மீண்டும் அதே கோரிக்கையை உங்களிடம்  முன்வைத்தேன்.இந்த இரண்டு கடிதங்களின் நகல்களையும்,ஹன்சார்ட் இல் உள்ளடக்குவதற்காக இப்போது உங்கள் அனுமதியுடன்,உங்களிடம் ஒப்படைக்கிறேன்.


இதேவேளை, நான் சமர்ப்பித்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டமூலத்தின் நோக்கத்தை ஒத்த ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட சட்டமூலம் ஒன்று 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  நவம்பர் 10, 2022 அன்று, பாராளுமன்றம் அதனை குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பியது.


நான் சட்டமூலத்தை சமர்ப்பித்த சில மாதங்களுக்குப் பின்னர்,ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பான அறிக்கை எனது சட்டமூலத்துடன் இணைக்கப்பட்டு, 2023 ஜனவரி 5 ஆம் திகதி சம்பந்தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.இந்த அறிக்கை பெப்ரவரி 28,2023 அன்று நாடாளுமன்றத்தின் பாராளுமன்ற நிலையியற் குழுவால் பரிசீலிக்கப்பட்டது.அவ்வாறு பரிசீலித்த பிறகு,இரண்டு சட்ட வரைவுகள் உள்ளதால்,இரண்டு தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அமைச்சுக்கு குழு உத்தரவிட்டது.


முன்மொழியப்பட்ட இரண்டு சட்ட வரைவுகளினதும் அறிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, 09 ஜூன் 2023 அன்று மீண்டும் பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடியது,இரண்டு வரைவுகள் தொடர்பாகவும் தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பிறப்பிக்கப்ட்ட முந்தைய உத்தரவுகளை உதாசீனம் செய்ததால், மீண்டும்,இந்த இரண்டு முன்மொழியப்பட்ட வரைவுகள் தொடர்பாக தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்க அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு குழுவின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல் இருப்பது, தெளிவாக,பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை மீறுவதாகும்.


இந் நிலையில்,எனது சட்டமூலம் தொடர்பான மேற்படி உத்தரவுகளின்படி செயற்படாமல், எனது சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு நான்கு (04) மாதங்களுக்குப் பின்னர் அமைச்சின் அறிக்கையை பெறுவதற்காக,

சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க உறுப்பினரின் சட்டமூலம் தொடர்பான கட்டளைக்கு  மாத்திரம் அமைச்சு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.அனுப்பப்பட்ட அந்த அறிக்கை தொடர்பாக மட்டும் நடவடிக்கைகளை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது.


நிலையியற் கட்டளைகள் 52(7)இன்படி, அமைச்சரிடம் கோரப்பட்ட அறிக்கை அன்றிலிருந்து ஆறு (06) மாதங்களுக்குள் பாராளுமன்றத்திற்கு கிடைக்கப்பெறாவிட்டால்,சட்டமூலத்திற்குப் பொறுப்பான உறுப்பினர் விரும்பும் நாளொன்றில் இரண்டாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தின் ஒழுங்கு பத்திரத்தில் உள்ளாக்கப்பட்ட வேண்டும்.ஆனால், நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடமும் உங்களிடமும் நான் விடுத்த கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


எனவே, இந்த வரைவு, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆறு (06) மாதங்களுக்கு மேலாகிவிட்டதால், தேவையற்ற காலதாமதம் இன்றி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, 


நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் துணை அட்டவணையின் “ஆ” பகுதியின் ஒன்று, இரண்டு மற்றும் நான்காவது உப பிரிவுகளுக்கு உங்களின் கவனத்தை ஈர்க்க அந்த இரண்டு ஷரத்துகளையும் வாசிக்க விரும்புகிறேன்.


அதற்காக அனுமதியை கோருகிறேன்.


பாராளுமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்க முடியுமான குற்றங்கள்.


பிரிவு ஒன்று -


இந்தச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தின் எந்தவொரு உத்தரவையும் அல்லது ஏறூறுக்கொள்ளப்பட்ட முன்மொழிவு ஒன்று அல்லது இச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் அல்லது சபை முதல்வர் அல்லது உறுப்பினரொருவரின் எந்தவொரு உத்தரவையும் வேண்டுமென்றே புறக்கணித்தல் அல்லது இணங்க மறுத்தல்.


பிரிவு இரண்டு -


பாராளுமன்றத்தின் மூலம் அல்லது குறித்த பணியொன்றுக்காக முறைப்படி அதிகாரம் வழங்கப்பட்ட செயற்குழு ஒன்று மூலம் வரவுக்காக அல்லது ஆவணங்கள்,

புத்தகங்கள்,அறிக்கைகள் சமர்பிப்பிக்கும்படி செய்யப்பட்ட உத்தரவொன்றுக்குச் சட்டத்தின் பிரிவு 13 மற்றும் பிரிவு 15 ஆல் வழங்கப்பட்ட வருகை அல்லது சமர்ப்பித்தல்  மூலம் விலக்கு அளிக்கப்பட்டாலன்றி வேண்டுமென்றே மீறுதல்.


பகுதி நான்கு -


பாராளுமன்றத்திலோ அல்லது செயற் குழுவிலோ அல்லது பாராளுமன்ற வளாகத்திலோ எந்தவொரு உறுப்பினரையும் தாக்குதல்,அவமதித்தல் அல்லது வேண்டுமென்றே தடைகள் ஏற்படுத்தல்.


ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்,நான் முன்வைத்த விடயங்களின் அடிப்படையில்,எனது பணியில் வேண்டுமென்றே குறுக்கீடு இருந்ததை எவரும் புரிந்து கொள்ள முடியும்.


குழுவால் தனித்தனியாக அறிக்கை சமர்பிக்கும்படி கொடுக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.  இது இரண்டாம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.


நான்காவது பிரிவை மீறி, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் தடை ஏற்படுத்தி, துன்புறுத்தி,அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன்.


எனவே கௌரவ சபாநாயகர் அவர்களே,


பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் எவ்வித இடையூறும் இன்றியும், துன்புறுத்தலும் இன்றி நிறைவேற்றுவதற்குத் தேவையான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களின் முழுமையான பொறுப்பாகும்.


உங்கள் நேரத்தை வீணடித்து தேவையற்ற விளக்கங்களை செய்ய நான்  விரும்பவில்லை.இந்த அநீதி, இந்த தவறு, கருப்பு வெள்ளை போல மிகத் தெளிவாக உள்ளது.


நாடாளுமன்றத்தின் பாரபட்சமற்ற தன்மை, மரியாதை,கண்ணியம் ஆகியவை கேள்விக்குட்படுத்தப்படாமலும், அவமதிக்கப்படாமலும் இருக்கும் வகையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடைபெறுவது மிகவும் முக்கியம். இந்த விஷயத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை உங்களிடம் சமர்ப்பிக்க நினைத்தேன்.


பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை அநியாயமாக தடுக்கும்,துன்புறுத்தும் மற்றும் அவமரியாதை செய்யும் இத்தகைய நடவடிக்கைகள் இந்த பாராளுமன்றத்தில் நடைபெறாமல் இருப்பது உங்கள் பொறுப்பு.

No comments

Powered by Blogger.