உடைந்த பாலத்துக்கு வழிகாட்டிய Google Map - நீரில் மூழ்கி இறந்த நபர்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் பிலிப் பாக்ஸன். இவர் அமெரிக்கக் கடற்படை வீரராகவும், மருத்துவ சாதனங்களை விற்பனை செய்பவராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
கடந்தாண்டில் ஒருநாள் மழைக்கால இரவில், தன் மகளின் ஒன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நண்பனின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நண்பனின் மகளுக்கும், இவரின் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால், இருவரின் பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.
தனது வீட்டில் இருந்து நண்பனின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். பார்ட்டி முடிந்ததும் பாக்ஸனின் மனைவி, அவரின் மகள்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு முன்னதாகவே சென்று சேர்ந்துள்ளார். பார்ட்டி நடைபெற்ற இடத்தைச் சுத்தம் செய்வதற்காக பாக்ஸன் அந்த இடத்திலேயே சிறிது நேரம் தங்கி பணியை முடித்து கிளம்பி இருக்கிறார்.
அந்த இடத்தில் இருந்து பாக்ஸன் கிளம்புகையில் மழையும் இருளும் வழியை புலப்படாமல் மறைக்கவே, கூகுள்மேப் சொல்லும் தகவலை வைத்து தனது காரை இயக்கி இருக்கிறார்.
கூகுள் மேப், பாலத்தின் மீது செல்லும்படி வழியைக் காட்டவே, அப்படியே சென்றவர் அந்தப் பாலத்தில் இருந்து 20 அடிக்குக் கீழே விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார். ஏற்கெனவே இடிந்து விழுந்த அந்தப் பாலம், தடை ஏதும் போடப்படாமல் இருந்திருக்கிறது. அந்த வழியாகவே கூகுள்மேப் வழிகாட்டவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பாக்ஸனின் மனைவி அலிசியா,
“கூகுள் மேப் பல ஆண்டுகளாக இடிந்து விழுந்த பாலத்தைப் பயன்படுத்த ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுகிறது. `பாலம் பயன்படுத்த முடியாதது’ என விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மற்றொருவர் கூகுள் மேப்பில் உள்ள எடிட் அம்சத்தைப் பயன்படுத்தி பலமுறை எச்சரித்தார். இருந்தபோதும் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூகுள் மேப்ஸில் உள்ள திசைகளை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் கணவர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பின்னரும், அந்தப் பாலம் செல்லக்கூடிய பாதையாகவே காட்டப்பட்டது’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கூகுளின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் காஸ்டநேடா கூறுகையில்,
“பாக்ஸன் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். வரைபடத்தில் துல்லியமான வழியை வழங்குவதே எங்களது குறிக்கோள். நாங்கள் இந்த வழக்கை மதிப்பாய்வு செய்கிறோம்’’ என்று அறிவித்துள்ளார்.
Post a Comment