இன ஐக்கியம் முக்கியமானது, அதனைச் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது -
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பில் யாரேனும் விசம சக்திகள் சமூக சகவாழ்வுக்கு குந்தகம் விளைவித்து அமைதியைக் குலைக்க ஒருபோதும் இடமளியோம் என ஏறாவூர் புன்னைக்குடா புண்யராம விஹாராதிபதி தம்பகல்ல வனரத்ன தேரர் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான விழிப்புணர்வு ஊர்வலத்தின் நிறைவில் கலாசார நிகழ்வை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் புன்னைக்குடா புண்யராம விஹாரை மண்டபத்தில் ஞாயிறன்று 01.10.2023 நிகழ்வு இடம்பெற்றது.
சமூகங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வை வலுப்படுத்தும் விதமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க, கிறிஸ்தவரல்லாத, பௌத்த மதங்களைப் பிரதிநிதித்துவப்டுத்தும்; மாவட்ட சர்வமதப் பேரவை செயற்குழுவின் செயற்பாட்டாளர்களும் சர்வ மதங்களையும் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சகல சமூகங்களின் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வண்ணம் அங்கு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய தம்பகல்ல வனரத்ன தேரர், சமூகங்களுக்கிடையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணிவருவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த மாவட்டத்தில் இன சமூக ஐக்கியம் முக்கியமானது. அதனைச் சீர்குலைக்கு எவருக்கும் நாம் இடமளிக்க முடியாது. நாம் ஒவ்வொரு சமூகத்தாரும் எங்களுக்கிடையில் பரஸ்பர அன்பு புரிதலோடு வாழ்ந்தால் எந்த தீய சக்தியும் எமக்கிடையில் புகுந்து பிளவுகளை ஏற்படுத்த முடியாது.
இலங்கையின் எப்பாகத்தில் வாழ்கின்ற எந்த சமூகத்தினரும் இன மத மொழி பிரதேச வேறுபாடுகளின்றி வந்து செல்லக் கூடிய ஒரேயொரு தலமாக இந்த புன்னைக்குடா புண்யராம விஹாரையை ஸ்தாபித்துள்ளேன்.
நான் சமாதான சகவாழ்வுக்காக முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கும்;, அதேபோன்று இந்துக்களின் ஆலயங்களுக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் சென்றிருக்கின்றேன்.
இவையனைத்தும் நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கிடையிலும் நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்ற நன்நோக்கில்தான் செய்துவருகிறேன். இங்குசு எல்லா சமூகங்களையும் சேர்ந்த குழந்தைகள் சமாதானமாக ஒன்று கூடி கலை நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதுபோன்று இன சமூக ஐக்கியம் இனி எதிர்காலத்திலும் தொடர பெரியவர்கள் வழிவகை செய்ய வேண்டும். அத்தகைய நோக்கத்திற்காக பாடுபடும் மாவட்ட சர்வமதப் பேரவையின் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி” என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீட்இ செயல் குழுவின் செயலாளர் ஏ.எல். அப்துல் அஸீஸ், ஒருங்கிணைப்புச் செயலாளர் கே. சங்கீதா, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் உட்பட பேரவையின் செயல்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment