Header Ads



கெய்ரோ அல் - அஸ்ஹர் இலங்கை மாணவர்களுடன், ரிஸ்வி முப்தி சந்திப்பு


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களுக்கும் கெய்ரோவில் அமைந்திருக்கும் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியத்துக்குமிடையிலான ஒரு சினேகபூர்வ கலந்துரையாடல் வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில்  2023.10.17 ஆம் திகதி  இடம்பெற்றது.


ஆரம்ப நிகழ்வாக அல்-ஹாபிழ் ஹுஸைன் அஸ்ஹரி அவர்களின் கிராஅத்தினைத் தொடர்ந்து இலங்கை மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அஷ்-ஷைக் ஷாஹுல் ஹமீத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஃபத்வா குழுவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் தமது உரையில் ஜம்இய்யா பற்றிய அறிமுகம், அதன் வேலைத்திட்டங்கள், சேவைகள் மற்றும் மாணவர்களிடத்தில் ஜம்இய்யா எதனை எதிர்பார்க்கிறது என்பன பற்றி விளக்கினார்கள். அடுத்து இடம்பெற்ற கேள்வி-பதில் நிகழ்வில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் ஜம்இய்யாவின் முன்னேற்றத்துக்கு அம்மாணவர்கள் வழங்கிய கருத்துகளும் உள்வாங்கப்பட்டன.


குறித்த கலந்துரையாடலில் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு இலங்கையிலிருந்து மாணவர்கள் சரியான முறையில் உள்வாங்கப்படவில்லை என்றும் 2019 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக நுழைவுக்கான உள்நுழைவுப் பரீட்சைகூட நடாத்தப்படவில்லை என்றும் அம்மாணவர்கள் கவலையுடன் பகிர்ந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இறுதியாக அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் அம்மாணவர் ஒன்றியத்துக்கு ஜம்இய்யாவின் வெளியீடுகளை அன்பளிப்பாக வழங்கினார்கள். இந்நிகழ்வில் குறித்த மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கலாநிதி ஆய்வாளர்களாகிய அஷ்-ஷைக் ஷாஹுல் ஹமீத், அஷ்-ஷைக் முஹம்மத் ஷிபான், அஷ்-ஷைக் கஸீர் பிச்சைத்தம்பி, அஷ்-ஷைக் முஹம்மத் ரிஸ்னி, அஷ்-ஷைக் ஹிப்னாஸ் அஹ்மத், முதுகலை மாணவர்களான அஷ்-ஷைக் முஹம்மத் ரிக்ஸி, அஷ்-ஷைக் முஹம்மத் ஹுஸைன், அஷ்-ஷைக் முஹம்மத் பாஸில், அஷ்-ஷைக் பனூஸ் முபாறக், உஸூலுத்தீன் பிரிவு மாணவர்களான அஷ்-ஷைக் அப்துல் ஹக், அஷ்-ஷைக் அஹ்மத் ஸஹீல், அஷ்-ஷைக் முஹம்மத் ஷாஹித் மற்றும் மஃஹத் பிரிவு மாணவர் அஷ்-ஷைக் அஹ்மத் ஸஹ்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.