Header Ads



இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சினை என்று தீரும்..?


- அஜ்மல் மொஹிடீன் -


இஸ்ரேல், பாலஸ்தீன் மக்கள் பிரச்சினை என்பது இஸ்ரேல் படைகளுக்கும், காஸா படைகளுக்கும் என்ற யுத்தத்தின் மூலம் தீர்க்கப்படப் போவது இல்லை, அல்லது இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்கள் பேசி தீர்வு காணப்படப் போவதுமில்லை.


மாறாக இஸ்ரேலை பாதுகாப்பதன் மூலம் தனக்கு எந்த நலனும் இல்லை என்று எப்போது அமெரிக்காவும், மேற்குலகமும் கருதுகின்றனவோ அப்போது இஸ்ரேலை கைவிட்டு விலகும்போது இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினை தீர்ந்து விடும்.


என்று இஸ்ரேலை போஷிப்பதனூடாக அமெரிக்க,மேற்குலக மக்களுக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து என்று உணரப்படுகின்றதோ அன்று இஸ்ரேல் தனித்து விடப்படும்போது  இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினை தீர்க்கப்படும்.


இலங்கையில் பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட இனப்பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்து அஹிம்சை போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது இந்தியா இளைஞர்களுக்கு ஆயுதம் கொடுத்து யுத்தப் பயிற்சியும் கொடுத்தது. இஸ்ரேல் சமகாலத்தில் இலங்கையின் அரச படைகளுக்கும், தமிழ் விடுதலை போராட்ட அணிகளுக்கும் யுத்தப் பயிற்சி கொடுத்தது. ஈழப் போராட்டம் விடுதலைக்கான உச்சத்தை தொட்ட போது இந்தியாவினதும்,அமெரிக்க மேற்குலகினதும் வலைக்குள் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை ஒத்துழைத்த போது இந்தியா, அமெரிக்கா, மேற்குலகம் யாவும் தமிழ் போராட்டத்துக்கான ஆதரவை கைவிட்டது மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு முழுமையான ஆதரவு அளித்து விடுதலை போராட்டத்தை நசுக்கி அழிக்கவும் உதவிய அழித்தனவே அதே நிலை தான், இங்கு அமெரிக்காவும், மேற்குலகமும் தமது இஸ்ரேல் மீதான ஆதரவில் இருந்து விலகிக் கொண்டாலே இஸ்ரேலின் வரைபடம் சுருங்கி விடும்.


இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினையும் விரைவில் தீர்க்கப்படப் போவதில்லை. அரபு நாடுகள் மெல்ல,மெல்ல அமெரிக்க சார்பு நிலையில் இருந்து விலகி ரஷ்யா சார்பு நிலை எடுப்பதும்,சியா,சுன்னி என்ற பிரிவினை கடந்து இஸ்லாமிய நாடுகள் என்ற கருத்தியலில் ஒரே நேர்கோட்டில் வருவதும் ,ஈரான் அணு ஆயுத உற்பத்திக்கான இறுதிநிலை எடுப்பதும் அமெரிக்க,மேற்குலகுக்கு அச்சுறுத்தலானது மட்டுமல்ல, இஸ்ரேலின் சியோனிஸ இருப்புக்கும் ஆபத்தானதே.


பூகோள இராஜதந்திர அரசியல் டிஷைன் வடிவமைப்பு தனது கைகளில் இருந்து மெல்ல மெல்ல விலகுவதை அமெரிக்கா விரும்பப் போவதுமில்லை.அதே நேரம் இஸ்ரேல்,காஸா யுத்தம் விரிவடைந்து வேறு நாடுகளுக்கும் பரவுமானால் அதை எதிர் கொள்ளும் அளவுக்கு அமெரிக்க,மேற்குலகின் இன்றைய பொருளாதார நிலைமை ஈடு கொடுக்க போவதுமில்லை.


சோவியத் ரஸ்யா துண்டு,துண்டாக உடைக்கப்பட்ட பின்பும், அணிசேரா நாடுகளின் அணி ஒழிக்கப்பட்ட பின்பும் பூகோள இராஜதந்திர   அரசியல்‌ டிஷைன் அமெரிக்க, மேற்குலக நலன்களுக்காக என்றாகி இருந்த நிலை சரிந்து ரஷ்ய, சீனா அணிதான் மேலோங்குமா.காலம் பதில் சொல்லும் வரை உயிர்களும், உடைமை அழிவதுதான் என்றாகி விட்டது.


No comments

Powered by Blogger.