Header Ads



ஜனாதிபதி பதவியை ஒழித்து, தேர்தலை ஒத்திவைத்து, பிரதமர் பதவியில் அமர திட்டம் போடும் ரணில..?

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தேர்தல் முறையை மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தன.


இதன்படி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமரை கொண்டு பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று -12- செய்தி வெளியிட்டுள்ளது.


அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத் திருத்தத்தின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன், அதன்மூலம் மேலும் ஒருவருடத்திற்கு தேர்தலை  பிற்போடப்பட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எவ்வாறாயினும், அரசாங்கத்தின் உத்தேச திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க பிரதான எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளன.


இதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜே.வி.பி.யும் இத்தருணத்தில் அரசாங்கத்தின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பாராளுமன்றத்திற்கு குறித்த சட்டத்தை கொண்டுவந்தால் எதிர்க்கும் என தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.


தற்போதைய அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் செயற்படுவதற்கான ஆணையின் பேரில் தெரிவு செய்யப்பட்டுள்ளதால், 2025 பொதுத் தேர்தல் முடியும் வரையாவது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கருத்தாக உள்ளது.


நிறைவேற்றுமுறை ஒழிக்கப்பட வேண்டுமானால், அது 2025 பொதுத் தேர்தலுக்குப் பிறகும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னருமாக இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கூறியுள்ளது.


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.


இதேவேளை, தேர்தல் முறை திருத்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் சூழல் சரியாக அமையுமாயின் சட்டத்தின் பிரகாரம் பொது வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி மாத்திரமே அழைப்பு விடுக்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



No comments

Powered by Blogger.