Header Ads



‘அல்லாஹ் மீது ஆணையாக, அல்லாஹ் காஸாவைப் பாதுகாக்கட்டும்

 


‘உம்மா எனக்கு பசி. சாப்பிட வேணும்’


கவலைப்படாதே உயிரே. நான் உனக்கு ஒரு கிரில் தக்காளி செய்து தருகிறேன்.


நான் யூசுபின் பசியை போக்க தக்காளி தேடி எனது தற்காலிக பக்கத்து வீட்டுக்காரரான உம்மு மஹ்மூத்தின் வீட்டிற்குச் சென்றேன்.  நான் திரும்பி வரும் வரை கதவை நன்றாக மூடிக் கொள்ளுமாறு யூசுபிடம் சொன்னேன். அவனது வாப்பா மருத்துவமனையில் தனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறார். போவதற்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. எனக்காக யூசுபைப் பாதுகாக்கும் படி அல்லாஹ்விடம் அவசரமாகப் பிரார்த்தித்துக் கொண்டேன்.


உம்மு மஹ்மூதின் கதவை நான் பலமுறை தட்டியும் யாரும் பதில் சொல்லவில்லை. அதனால் நான், தெருவின் மறுபுறத்தில் உள்ள அல்-மக்தாத்தின் வீட்டிற்கு சென்றேன். யூசுபை விட்டு விட்டு தூர வருவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் இப்போது வீட்டில் சாப்பிட எதுவுமேஇல்லை. ஏழு நாட்கள் தொடர் யுத்தம் எல்லாவற்றையும் கடினமாக்கி விட்டது.


‘உம்மா நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்,உங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? நீங்கள் குண்டுவெடிப்புக்கு அகப்படவில்லை என்று நம்புகிறேன்?


‘அல்லாஹ் மீது ஆணையாக, அல்லாஹ் காஸாவைப் பாதுகாக்கட்டும், ஹாஜ்ஜா’


நான் உம்மு மக்தாதிடம் தக்காளிப் பழம் பற்றிக் கேட்டேன். யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நீண்ட செய்திகளைக் கேட்பதற்கான ஆடம்பரம் இல்லை. ஒவ்வொரு செக்கனும் கடைசி செக்கனாக இருக்கக் கூடும். நான் தக்காளிப் பழத்தை வாங்கிக் கொண்டு சொன்னேன்.


‘ எங்களுக்காக து ஆ செய்யுங்கள், வல்லாஹி நிலமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒருவரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எங்களால் ஒன்லைன் போக முடியாதுள்ளது.


அல்லாஹ் உங்களையும் எல்லா மக்களையும் பாதுகாக்கட்டும். இது ஒரு நெருக்கடி. இறைவன் அருளால் இது கடந்து போகும்.


அப்போது பாரியதோரு வெடிச்சப்தம் கேட்டது.


ஒரு கரும் புகைத்திரள் எல்லாவற்றையும் மறைத்து மேலெழுந்தது. வெடியோசையில் நான் தற்காலிகமாக செவிடி ஆனேன். என் மனதில் ஒரு விடயம் மட்டுமே இருந்தது. யூசுபுக்கு ஒன்றும் ஆகியிருக்காதே.


மாசுகளைக் காவிய புகைத் திரளுக்குள்ளால்  மூச்சு முட்டியவளாக என் தெருவை நோக்கி ஓடினேன். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில்  ஒரு பெரிய கூட்டம். எல்லோரும் அலறி அடித்தவாறு மருத்துவ துணையாளர்களுக்கு உதவுகிறார்கள். உயிர்த்தெழுதலின் கொடூர நாள் போல  அந்தக் காட்சி இருந்தது.


‘நண்பர்களே, நீங்கள் யூசுப்பைப் பார்த்தீர்களா? இங்கே யாராவது ஒரு சிறுவனைப் பார்த்தீர்களா?


‘ வல்லாஹி, எனக்குத் தெரியாது. காயமடைந்தவர்கள் குணமடையப் போகிறார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்’


எனக்கு அங்கே டொக்டராகப் பணிபுரியும் அபு யூசுபின் ஞாபகம் வந்தது, போர் தொடங்கியதில் இருந்து அவர் வீடு திரும்பவில்லை.ஆம்புலன்ஸில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றேன். யூசுபை வைத்து நான் மூடிய கதவைக் காணவில்லை என்று நான் கார் கதவை மூடும் கடைசி நிமிடம் குறிப்பிட்டேன். யூசுப் அங்கு இல்லை. இந்தப் பூமி சுமந்திருக்கும் ஆபத்துக்கள் பற்றிய தாயுள்ளத்தின் உள்ளுணர்வு என்னைப் பீதியடையச் செய்தது.


வானத்திலிருந்து வரும் ஆபத்தை ஒரு தாய் எவ்வாறு தடுக்க முடியும்? 


போர் பற்றிய பயம் கூட வேறு வகையானது.


மருத்துவமனையின் இரண்டாவது மாடியில்  நான் யூசுபின் தந்தையை அவரது பச்சை உடையில் சந்தித்தேன். யுத்தம் மற்றும் இடைவிடாத பணியால் அவர் சோர்வடைந்திருந்தார். தனது கடமையில் மக்களுக்கு தனது உயிரையே கொடுத்தார்.


யூசுப் யூசுப்.. பெயரை மட்டும் தான் நான் சொன்னேன். நான் ஏன் வந்திருக்கிறேன் என்று அவர்களுக்குப் புரிந்தது. ஆஸ்பத்திரிக்கு மக்கள் மலையேற்றத்துக்காக வருவதில்லை..


யூசுப்பைத் தேடும் பயணம் தொடங்கியது. 


‘ யூசுப், ஏழு வயது. வெள்ளை நிறம். இனிமையான குழந்தை’ 


நான் சந்தித்த அனைவரிடமும், அது  மருத்துவராக இருந்தாலும், பத்திரிகையாளராக இருந்தாலும்  அல்லது காயமடைந்தவராக இருந்தாலும் இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். 


யூசுப் எங்கிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


பல அறைகளில் பல முறைகள் தேடி நான் சோர்வடைந்தேன். நான் என் கால்களை தூக்க முயற்சித்தேன். ஆனால் என் பயம் கனமாக இருந்தது.


நான் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.


யூசுபின் தந்தை அவனைத் தேட ஆரம்பித்தார். யூசுபின் வாழ்க்கை என் கண் முன்னே விரிந்தது. திருமணமாகி பல வருடங்கள் கழித்து தான் யூசுப் எனக்குக் கிடைத்தான். அவன் என் வாழ்வில் மிகப்பெரும் வரம். அவன் ஒரு நிலவைப் போல அழகானவன். அவனது வருகை என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு குறையையும் ஈடுசெய்தது. நான் அவனுக்கு யூசுப்  என்று பெயரிட்டேன். நான் அவனை வளர்த்தேன் அவனில் சுவாசித்தேன். என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு புது மகிழ்ச்சி. யூசுப் என் கைகளில் வளர்வதை நான் காண்கிறேன். அவன் விளையாடவும் பேசவும் தொடங்கினான். 


இந்த ஆண்டிலிருந்து அவன் பாடசாலைக்குப் போகிறான். ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் அவனை விட்டுப் பிரிந்து இருப்பது எனக்கு மிகக்கடினமான விடயம்.  நான் ஒவ்வொரு நாளும் விரிந்த கரங்களோடும் அவனுக்குப் பிடித்த தக்காளி கிரில்லுடனும் அவனுக்காக வாசலில் காத்திருப்பேன். 


‘என்னைத் தனியாக விடுங்கள்’ அபு யூசுப் வலியுடன் உச்சரிப்பதை நான் கேட்டேன். நான் கத்திக்கொண்டே அவரை நோக்கி ஓடினேன். அது அவனாக இருக்காது. நான் நம்ப முயற்சித்தேன். ஆனால் யூசுப்  அவருடைய மகன். அவருக்கு அவனைத் தெரியும். ஒரு தந்தை தனது மகனின் எதிர்காலத்தை கணிப்பதிலோ உடல் அடையாளங்களைக் கண்டறிவதிலோ பிழை விடுவதில்லை.


‘எல்லாம் முடிந்துவிட்டது’ தாய்மையின் உள்ளுணர்வு  என்னிடம் சொன்னது. 


நான் கடைசியாக யூசுபுக்கு விடைகொடுக்க விரும்பினேன்.


ஆனால் அவர்கள் என்னைத் தடுத்தனர், அவனுடைய அழகான உருவமே என் மனதில் இருக்க வேண்டும்  என்று அவர்கள் விரும்பினர்.


அவன் கருப்பு வெள்ளையாகச் சிதைக்கப்பட முன் , அவன் சுருள் முடியுடைய யூசுப் அல்-அபிதானி.


யாருக்கு எழுதுவது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு தாயாக என் சோகம் சொல்லில் விவரிக்க முடியாதது. அதனை நான் எப்படி வெளிப்படுத்துவது? 


யூசுபின் வருகைக்காக எனது பல வருட காத்திருப்பை நான் எவ்வாறு விளக்குவது? 


யூசுப் எனது இழப்பை ஈடு செய்தான்.


யூசுப்பின் இழப்பை யார் ஈடுசெய்வது?


அவனை அன்போடு வளர்த்தேன். என்னை இழந்து அவனுக்குத் தந்தேன். 


உங்கள் பிள்ளைகள் போல், அவனும் சாதாரணக் குழந்தையாக வாழ்வதற்காக வலியும், துன்பமும் தாங்கினேன். அவனைப் பாதுகாக்க அந்தக் கதவை மூடிவைத்தேன். 


இப்போது அவனும் இல்லை, கதவும் இல்லை. 


எப்படி ஒரு தாய் போரில் தன் மகனைக் காப்பாற்ற முடியும்?


ஒவ்வொரு நாளும் பாடசாலையிலிருந்து வரும் யூசுபிற்காக வாசலில் காத்திருந்தேன். 


இனி அவன் இல்லை.


நான் யாருக்காக காத்திருப்பது?


உங்கள் தகவலுக்காக சொல்கிறேன்.


யூசுப் பசியோடு தான் மரணித்தான்.


தமிழில் ஷமீலா யூசுப் அலி


27th October 2023

No comments

Powered by Blogger.