பெராரி காரைப் போன்ற முகமது ஷமி, இந்திய அணியில் புறக்கணிக்கப்படுவது ஏன்..?
இந்த உலகக் கோப்பையின் முதல் 4 ஆட்டங்களில் அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அணியில் வேறு வழியில்லாத காரணத்தாலேயே நியூசிலாந்துடனான போட்டியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆயினும் அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் முக்கியமான விக்கெட்டுகள் அனைத்தையும் வீழ்த்தி அந்த அணியின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினார். அந்த அணி கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி கடினமானதாக இருந்திருக்கும்.
இந்த வெற்றிக்காக இந்தியா கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்தது. இறுதியாக நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மாவின் அணி இந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐசிசி போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியை விட, OTTயில் அதிகமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியைப் பார்த்திருப்பதில் இருந்தே இந்தப் போட்டி எவ்வளவு முக்கியமானது என்பதை அறியலாம்.
மேலும், அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில், விராட் கோலி (354) மற்றும் ரோஹித் ஷர்மா (311) இப்போது இந்தப் போட்டியின் முதல் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆனார்கள்.
விராட் கோலி 95 ரன்களில் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். இந்தத் தொடரில் முதல்முறையாக பேட்டிங் செய்ய வந்த ரவீந்திர ஜடேஜா கடைசி வரை ஆடுகளத்தில் இருந்தார், வெற்றிகரமாகவும் விளையாடினார்.
ஆனாலும், அதிகம் பாராட்டப்பட வேண்டியது முகமது ஷமிதான்.
ஷமிக்கு இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆட்டத்தில் அவர் பந்துவீசிய விதம் இனிமேல் அவரைப் புறக்கணிப்பது கடினம் என்று காட்டியது.
அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.
ஷமி 10 ஓவர்களில் 5.4 என்ற வீதத்தில் பந்துவீசி ஐந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பினார். பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நியூசிலாந்து அணி 273 ரன்களில் தோற்றது ஷமியின் அற்புதமான பந்துவீச்சால் தான்.
ஷமி இடது கை மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.
அவர் தனது ஃபுல் லெங்த் பந்தில் இரண்டு விக்கெட்டுகளையும், குட் லெங்த் பந்தில் ஒரு விக்கெட்டையும், ஷார்ட் ஆஃப் குட் லெங்த் பந்தில் ஒரு விக்கெட்டையும் எடுத்தார், அதே நேரத்தில் அவர் ஒரு பேட்ஸ்மேனை யார்க்கர் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார்.
ஷமி இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை நேற்று பெற்றார்
அணியில் இல்லாததுபற்றி ஷமி என்ன சொன்னார்?
ஷமி இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை நேற்று பெற்றார். அதேசமயம் இந்த போட்டிக்கு முன்பு, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அணியில் சேர்க்கப்படாதது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஷமி பதிலளிக்கையில், "அணி நன்றாக விளையாடினால், வெளியே இருப்பது கடினம் அல்ல. உங்கள் சகாக்கள் சிறப்பாகச் செயல்பட்டால் நீங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். அணி சிறப்பாகச் செயல்படுவதுதான் முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
அவரது செயல்பாடு மற்றும் அணிக்கு திரும்பியது குறித்து ஷமி கூறுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பும் போது ஒருவர் தன்னம்பிக்கை பெற வேண்டும். முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பது தன்னம்பிக்கை அளிக்க்கும் விஷயம். இந்தப் போட்டி எனக்கும் அதைக் கொடுத்தது," என்றார்.
ஆட்டத்திற்குப் பிறகு, கேப்டன் ரோஹித் சர்மாவும் ஷமியின் பந்துவீச்சையும் அனுபவத்தையும் பாராட்டினார். மேலும் "ஷமி இங்குள்ள சூழ்நிலைகளை நன்றாகப் பயன்படுத்தினார்," என்று கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தின் கொண்டார், என்றார்.
இர்ஃபான் பதான் தனது x சமூக வலைதளப் பக்கத்தில், “முகமது ஷமி ஃபெராரி காரைப் போன்றவர். அதை எப்போது கேரேஜிலிருந்து வெளியே எடுத்தாலும், அதே வேகத்தையும், சிலிர்ப்பையும், மகிழ்ச்சியையும் தரும்,” என்று பதிவிட்டுருக்கிறார்.
Post a Comment