Header Ads



நாட்டை விட்டுச் செல்வதா? இல்லையா? என சிந்திக்க வேண்டியது அவசியம்


நாட்டை, பொருளாதார சவால்களிலிருந்து மீட்டெடுத்து போட்டித் தன்மைமிக்க பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்காக மனித வளத்தை ஒன்றுதிரட்ட வேண்டுமெனவும், சவால்களுக்கு மத்தியில் நாட்டை விட்டுச் செல்வதா? இல்லையா? என்பதை அறிவார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அடுத்த ஐந்து வருடங்களில் உலகம் பெரும் மாற்றங்களை சந்திக்கப் போவதாக கண்காணிப்புக்களில் தெரியவந்துள்ளதால், அபிவிருத்தி அடைந்த நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது, சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக்கதினால் 246 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,


"முப்படைகளினதும் ஆட்சேர்ப்பு பிரிவு அல்லது சிவில் பிரிவைப் பிரதிநித்துவப்படுத்தும் அதிகாரிகள் என்ற வகையில் பட்டத்தை பெற்றுக்கொண்டு நாட்டிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தை கடந்து செல்வதா? அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.


நாட்டின் பொருளதார சவால்களை வெற்றிகொள்வதற்கு நாட்டுக்கு அறிவார்ந்த மனித வளத்தின் அவசியம் உள்ளது. அதனால் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்.


கடந்த காலங்களில் ஒரு தேசமாக பல்வேறு சவால்களுக்கும் நிலையற்ற தன்மைகளுக்கும் முகம்கொடுத்தோம். அதன் விளைவாக தங்களது இலக்குகளை அடைய பலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணத்துடன் இருக்கின்றனர். எவ்வாறாயினும் இலங்கை, இலகுவானதாக இல்லாவிட்டாலும் நிலையான ஒரு பொருளாதார கொள்கையை தற்போது பின்பற்றுகிறது. அதனால், பணவீக்கத்தை குறைத்தவுடன் வருமான வழிமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.


2024 ஆண்டு, எமது நாட்டின் பொருளார வளர்ச்சியை மீள ஆரம்பிப்பதற்கான ஆண்டாகும் என்பதோடு, நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்ட அனைத்து தருணங்களிலும் நாட்டின் வளர்ச்சிக்கு பட்டதாரிகள் சமூகம் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.


அடுத்த 10 வருடங்களுக்குள் பல்வேறு பொருளாதார மாற்றங்களை உலகம் சந்திக்கப் போகின்றது என்று கூறப்படுகிறது. கனடா மற்றும் ஐரோப்பா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. எதிர்காலம் தொடர்பில் உங்கள் அவதானம் செலுத்தும் போது மேற்படி சவால்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.


நீங்கள் உள்நாட்டில் தொழில் செய்து நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் போது, சிறந்த பொருளாதார நிலையை நாட்டிற்குள் உருவாக்க முடியும்.


நீங்கள் அந்த பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அபிவிருத்தியின் பங்குதாரர்கள் ஆவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். தேவையேற்படுமாயின் இந்த பட்டத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் இயலுமையும் உங்களுக்கு உள்ளது. எவ்வாறாயினும் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு, போட்டித் தன்மை மிக்க பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த வேண்டும். அதற்காக நாட்டின் மனித வளத்தையும் ஒன்றுதிரட்ட வேண்டும்.


இலங்கையில் 450 இற்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அவற்றை பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வியற் கல்லூரிகளாக மாற்ற வேண்டும். அதனால் தொழில்வான்மை மிக்க சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். தொழில் திறன் கொண்ட பிரஜைகளுடன் இலங்கையின் கதவுகளை உலகிற்கு திறக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப தெரிவுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.


இராணுவத்தினரும் சிவில் சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான கட்டமைப்பாக பல்கலைக்கழகங்களை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்." என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ தளபதி ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ ஆகியோருடன், சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட, உப வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.