Header Ads



ஒலுவில் கடலில் நீராட வேண்டாம் - உலமா சபை வேண்டுகோள்


(அஸ்லம் எஸ்.மெளலானா)


ஒலுவில் பிராந்திய கடலில் நீராடுவதை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் ஒலுவில் கிளை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதனை வலியுறுத்தி அதன் தலைவர் மௌலவி ஏ.எல். பைஸல், செயலாளர் மெளலவி எம்.எல். பைசால் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;


அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், வெளிச்ச வீடு, ஒலுவில் துறைமுகம் போன்றவை அமைந்திருப்பதால் பல பகுதிகளில் இருந்தும் அனேகமானவர்கள் இவற்றைப் பார்வையிட வருகை தருகின்றனர்.


குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் எழுதிய பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் சகபாடிகள் என பலர் வருகைதந்து இம்முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதுடன் கடலில் நீராடுவதிலும் ஈடுபடுகின்றனர்.


ஆனால் தென்கிழக்குப் பிராந்திய கடற்பரப்பில் ஒலுவில் சற்று ஆழம் கூடிய கடற்பரப்பாக காணப்படுகிறது. இதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை.


இந்நிலையில் கடலில் பரீட்சயம் இல்லாத இளையோர்கள் பல சந்தர்ப்பங்களில் இக்கடலில் மூழ்கி மரணத்தை தழுவுகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.


மரணத்தை எழுதி வைத்தவன் அல்லாஹ். எந்த இடத்தில் மரணத்தை அல்லாஹ் நாடி இருக்கின்றானோ அங்கே அவரை கொண்டு சேர்ப்பான். இருப்பினும் மனிதன் தற்பாதுகாப்பாக நடந்து கொள்வதன் மூலமாக மேற்படி இடர்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியுமாக இருக்கும்.


இப்பிரதேச கடற்கரையை அண்மித்து வசிப்பவர்களை விட தூர பிரதேசங்களிலிருந்து வருவோரே இக்கடலில் மூழ்கி அதிகம் மரணித்துள்ளனர். அதிலும்  வெளியூர்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களின் உயிர்களை இக்கடல் காவு கொண்டுள்ளது.


நேற்று முன்தினம் திங்களன்று கூட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் பிரத்தியேக வகுப்பு முடிவடைந்த பின்னர் சக மாணவர்களுடன் இக்கடலில் நீராடச் சென்று மரணத்தை தழுவி ஜனாசாவாக மீட்கப்பட்டுள்ளார்.


இது போன்ற மனதை உருக்கும் பல சம்பவங்கள் இங்கு தொடர்ச்சியாக இடம்பெறுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து எமது இளைய சமூகத்தை பாதுகாப்பது அவசியமாகும்.


ஆகையினால் குறைந்த பட்சம் நீச்சல் திறமை இல்லாதவர்கள் ஒலுவில் பிராந்திய கடலில் நீராடுவதை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் ஒலுவில் கிளை பொது மக்களை வினயமாக வேண்டிக்கொள்கிறது- என்று ஒலுவில் உலமா சபை வலியுறுத்தியுள்ளது.



No comments

Powered by Blogger.