Header Ads



கையில் இருக்கும் டொலர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து


இலங்கையில் தற்போது வாகனம் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதி தடையை நீக்கினால், இலங்கை அரசாங்கம் தனது  கையிருப்பில் உள்ள டொலர்களை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.


ஆனால் ரூபாவின் வருமானம் அதிகரிக்கும். எனினும்,  டொலர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கின்றது என பேராசிரியர் கூறினார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


இலங்கையில் அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மேலும், இறக்குமதி தடையும் இன்னும் நீக்கப்படவில்லை. வாகனங்களுக்கு இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இன்னும் பல பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு நீடிக்கின்றது.


சர்வதேச நாணயம் இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்துங்கள் என்று இலங்கையிடம் கூறுகின்றது. அப்படி தளர்த்தினால் இந்த கையிருப்பு இலங்கையிடம் இருக்காது. எனவே பல சிக்கல்கள் உள்ளன.


வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் மீதான இறக்குமதி தடையை இலங்கை அரசு நீக்கினால் கையிருப்பில் உள்ள டொலர் போய்விடும்.


ஆனால் இறக்குமதி கூடும்போது இறக்குமதி தீர்வை அரசாங்கம் விதிக்கும். இலங்கை ரூபாவின் வருமானம் கிடைக்கும். ஆனால் கையில் இருக்கும் டொலர் போய்விடும். ஆகவே இது ஒரு இக்கட்டான நிலைமை. இலங்கை ரூபாவில் வருமானம் கூடும். ஆனால் டொலர் பறிபோய்விடும்.


ஆகவே இலங்கை அரசாங்கத்திற்கு ரூபாய் வருமானம் தேவையா, டொலரை காப்பாற்றுவது முக்கியமான என்ற சிக்கல் உண்டு.


தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு டொலரை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது.


வாகன இறக்குமதி துறை இன்று முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. தற்போது உதிரிப்பாகங்கள் மீதான தடையை ஓரளவுக்கு தளர்த்தப் போகின்றார்கள் என தெரிவித்துள்ளார். 


இதேவேளை, நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள வாகன இறக்குமதிக்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது.  இந்நிலையில் வாகன இறக்குமதி மீதான தடை விரைவில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாப்பிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் இந்த தடை நீக்கப்படுமானால் டொலரின் கையிருப்பு குறைவதுடன் பெறுமதியும் மிக வேகமாக உயரப் போகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

No comments

Powered by Blogger.