ஏமாற்றப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடியதால் பதற்றநிலை
இச்சம்பவத்தில் பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்பாக கொடுத்த பணத்தினை பெற்றுத் தருமாறு கோரி இன்றைய தினம் (20-10-2023) ஒன்று கூடிய காரணத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் 100 வீதம் நம்பிக்கை என கூறி தாய்லாந்து, டென்மார்க் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் அனுப்புகின்றோம் என கூறி 188 நபர்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர்.
டென்மார்க்கிற்கு ஒருவருக்கு 5 50,000 ரூபா என 20 நபர்களிடமும், தாய்லாந்திற்கு ஒருவருக்கு 450,000 ரூபா என 22 நபர்களிடமும், துபாய்க்கு ஒருவருக்கு 350,000 ரூபா என 146 நபர்களிடமும் மொத்தமாக 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் (72,100,000) பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை வெளிநாடு அனுப்புவதாக கூறி 42 பேரை கொழும்பிற்கு அழைத்து சென்று விடுதி ஒன்றில் விட்டுவிட்டு முகவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை துபாய் நாட்டிற்கு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசடி நிலையினை கொக்கட்டிச்சோலை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து இன்று குறித்த மூன்று முகவர்களும் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மூன்று முகவர்களிடமும் தாங்கள் வழங்கிய பணத்தினை பெற்று தருமாறு கோரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடினர்.
100க்கும் அதிகமானோர் இன்று கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் அங்கிருந்துவந்து மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்பாகவும் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையினை காணமுடிந்தது.
குறித்த முகவர்களாக செயற்பட்டவர்களின் ஒருவர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment