Header Ads



கதறி அழுத மாணவன், உடனடியாக செயற்பட்டு பரீட்சை எழுத உதவிய பொலிஸ் அதிகாரி


இன்றைய தினம் -15- நாடாளாவிய ரீதியில்  நடைப்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் சிக்கிய நிலையில் உடன் செயற்பட்ட காவல்துறை அதிகாரி மாணவனுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுத்து மீண்டும் பரீட்சை எழுத வைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள பரீட்சை மண்டபத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிலிஷா தேஷாஞ்சன போகுந்தர என்ற மாணவன் மஹிந்த கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்றுவருகிறார்.


இந்நிலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்திற்கு வந்து முதல் வினாத்தாள் விடைகளை எழுதி முடித்திருந்தார்.


தொடர்ந்து இடைவேளையின் போது, ​​மற்றொரு மாணவனுடன் கழிவறைக்கு செல்ல ஓடும்போது, ​​கட்டடத்தின் நுனியில் கால் தடுமாறி விழுந்து, தலையில் படுகாயமடைந்த நிலையில் கதறி அழுதுள்ளார்.


அவ்வேளை பொரலஸ்கமுவ காவல்நிலைய சுற்றாடல் பிரிவின் பொறுப்பதிகாரி, பரீட்சை பாதுகாப்பு மேற்பார்வைக் கடமைகளுக்காக அவ்வேளையில் பிரசன்னமாகிய உப காவல்துறை பரிசோதகர் தர்மதாச எகொட ஆராச்சி, இது தொடர்பில் பரீட்சை மண்டப அதிபருக்கு அறிவித்ததுடன், காயமடைந்த மாணவனை சப்-இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான காரில் வெரஹெர கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பரீட்சைக்கு தோற்றும் மாணவன் என வைத்தியர்களிடம் கூறி, உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.


அந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் உடனடியாக மாணவனுக்கு சிகிச்சை அளித்தனர். அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் மாணவனை மீண்டும் தேர்வு அறைக்கு அழைத்து வந்து, தேர்வு கூட அதிபர் மற்றும் தேவையான பொறுப்பான இடங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்து, விபத்தில் சிக்கிய மாணவனுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பரீட்சை எழுத அனுமதித்துள்ளார்.

1 comment:

  1. இந்த பொலிஸ் அதிகாரியின் இந்த உன்னதமான உயரிய செயலை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம். இந்த சிறிய குழந்தையின் ஆசையை நிறைவேற்ற அவர் செய்த பல முயற்சிகள் எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இது போன்ற உன்னதமான அதிகாரிகள் இந்த நாட்டில் இன்னமும் இருக்கின்றார்கள் என்பது எமக்கு இன்னும் அதிகமான தைரியத்தையும் ஊக்கத்தையும் வழங்குகின்றது. இது போன்ற அதிகாரிகளின் உன்னத செயல்கள் தொடர எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.