அலிசாஹிர் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம், கட்சி மாறுபவர்களுக்கு எச்சரிக்கை
2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 17,599 வாக்குகளை பெற்ற நசீர் அஹமட் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் அவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது.
கட்சி எடுத்த தீர்மானத்திற்கு மாறாக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை, சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் அறிவித்த கடிதத்தை ஆட்சேபித்து நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தததுடன், அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், ப்ரீதி பத்மன் சூரசேன ,S.துரைராஜா, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
நசீர் அஹமட் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சரியானதும் சட்டபூர்வமானதுமானதுமான தீர்மானம் என அறிவித்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம், நசீர் அஹமட்டின் பாராளுமன்ற பதவி வரிதாவதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலுள்ள அலி சாஹிர் மௌலானா பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கான கடிதம் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூறினார்.
Post a Comment