வடக்கு முஸ்லிம் மக்களிள் எதிர்பார்ப்பு
வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்பது அந்த மக்களின் பூர்வீக உரித்து அங்கீகரிக்கப்படுவதிலும், அவர்களது சுயாதீனமான அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் உறுதி செய்யப்படுவதிலும் தங்கியிருக்கின்றது என்பதே வடக்கு முஸ்லிம்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பாகவும் அமைகின்றது.
மேலும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் விசேட கவனத்தை செலுத்த முன்வரவேண்டும் எனவும், வடக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைந்து இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒன்றுபட வேண்டும். முதலில் அதற்கான கலந்துரையாடல்கள் “ஆரோக்கியமான நல்லிணக்க கலந்துரையாடல்களாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும்” என்பதையும், அதற்கான முயற்சிகள் இரு தரப்பினர் மத்தியிலிருந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி நிற்கின்றோம்.
அதன் தொடர்ச்சியாக வடக்கு முஸ்லிம் மக்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டமையானது “இனச்சுத்திரிப்பு நடவடிக்கை என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கை” என்பதை ஏற்று இதுவரை முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்ற எமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மீள ஒழுங்கமைத்துத்தரும் வகையில் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும், எமது மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமையக் கூடிய “விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவ வேண்டும்” என்றும் வடக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் இத்தால் பகிரங்கமாக வலியுறுத்தி நிற்கின்றது.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலுள்ள பிரச்சினைகளான காணி, வீடு, உட்கட்டமைப்புக்கள், மீள்குடியேற்ற கொடுப்பனவுகள், வெளியேற்றப்பட்ட போது ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடுகள் , கல்வி மற்றும் தொழி வாய்ப்புக்கள் போன்ற அனைத்திலுமே குறைபாடுகள் காணப்படுகின்றது. இவற்றை வடக்கில் மீள்குடியேறும் முஸ்லிம் மக்களுக்கு முறையாக பெற்றுக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்படும் புதிய பொறிமுறையான ஜனாதிபதி ஆணைக்குழு உரிய சிபாரிசுகளை அரசிற்கு முன்வைக்க என்பதுடன், உரிய சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை வடக்கு முஸ்லிம் மக்கள் சார்ந்து எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்றோம்.
என்.எம். அப்துல்லாஹ்
தலைவர் - யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர் கழகம்
இவ் ஊடக அறிக்கையானது 2023.10.30 ஆம் திகதி வடக்கு முஸ்லிம்களின் 33 வருட வெளியேற்ற நினைவுகூறல் நாளை முன்னிட்டு - வடக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தினால் வெளியிடப்பட்டது.
Post a Comment