Header Ads



இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை, மக்கள் அச்சப்பட தேவையில்லை


நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு  மட்டுமே நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


எவ்வாறாயினும், கடந்த 22 ஆம் திகதி முதல் இந்தியாவில் புதிதாக தொற்றுக்குள்ளான நபர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 700 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பரவல் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இலங்கைக்கான ஆபத்து மிகவும் குறைவு எனவும் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதால், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.