பேஸ்புக் பதிவு - குற்றச்சாட்டு வழக்கிலிருந்து ரம்ஸி ராசிக் விடுவிப்பு - இனவாதத்திற்கு எதிராக நிச்சயம் குரல் எழுப்புவேன் என்கிறார்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சமூக செயற்பட்டாளர் ரம்ஸி ராசிக் கடந்த வாரம் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்,
நான் கைது செய்யப்பட்ட காலகட்டம் இனவாதம் உச்ச நிலையில் இருந்த காலமாகும். ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்ததும் இனவாத அமைப்புகளினால் முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்தது. இனவாதிகள் இக்காலப் பகுதியில் முஸ்லிம்கள் தொடர்பில் பல பொய் பிரசாரங்களை சமூக ஊடகங்கள் மூலமும் ஏனைய ஊடகங்கள் மூலமும் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இக்காலத்திலேயே நான் கைது செய்யப்பட்டேன்.
2020 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் நாட்டில் கொரோனா வேகமாக பரவியது. அக்காலத்தில் நான் பதிவொன்றினைக் கண்டேன். அந்தப் பதிவில் முஸ்லிம் சமூகம் வேண்டுமென்றே சிங்கள மக்களிடையே கொரோனாவைப் பரப்புகிறார்கள் என்னும் கருத்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த தவறான பதிவுக்கு எதிராக முஸ்லிம்கள் சிந்தனா ரீதியில் போராட்டம் நடத்தவேண்டுமென எனது சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றினை இட்டேன்.
எனினும் எனது பதிவில் ‘இவற்றுக்கெல்லாம் எதிராக முஸ்லிம் மக்கள் கற்பனா ரீதியிலான போராட்டம் அல்லது ஜிஹாத் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று எழுதியிருந்ததாகவும் இதனால் நான் முஸ்லிம்களை யுத்தமொன்றுக்கு அல்லது போராட்டத்துக்கு தூண்டுகிறேன் என்றும் குற்றம்சாட்டி என்னை கைது செய்தார்கள்.
‘ஜிஹாத்’ என்ற சொல்லை அடிப்படையாக வைத்து சிஐடியினர் என்னைக் கைது செய்தார்கள். இரு சிஐடி அதிகாரிகள் அப்போது என்னைத் தாக்கினார்கள். சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் (ICCPR) என்னை ரிமாண்ட் சிறையில் அடைத்தார்கள்.
ஐசிசிபிஆர் சட்டம் மிகவும் சிறந்த சட்டமாகும். இச்சட்டம் அரசியல் உரிமை பேச்சு உரிமை மற்றும் மத கலாசார உரிமையின் சுயாதீனத்தை உறுதி செய்வதற்காகவே கொண்டு வரப்பட்டது. ஆனால் இச்சட்டம் இலங்கையில் முற்றாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உரிமைகளுக்கு எதிராகவே இச்சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்படுகிறது.
மக்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட இச்சட்டம் இலங்கையில் மக்களின் உரிமைகளை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஐசிசிபிஆர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டியது அவசியமாகும். இச்சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்பட்டால் நீதிவான் நீதிமன்றுக்கு பிணை வழங்கும் அதிகாரமில்லை. மேல் நீதிமன்றத்திலே பிணை பெற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு பிணை பெற்றுக்கொள்ள சுமார் 3 மாத காலம் செல்லும்.
நான் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் 5 ½ மாத காலம் சிறையில் இருக்க வேண்டியேற்பட்டது. அதன் பின்பே பிணை வழங்கப்பட்டது என்றார்.
ரம்ஸி ராசிக்கின் கைது தொடர்பான வழக்கு 3 வருட காலத்தின் பின்பே முடிவுக்கு வந்துள்ளது. இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகள் எதுவுமில்லாத காரணத்தினால் வழக்கினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்ததையடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டார். சிஐடி யினரால் இவர் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா சட்ட விதிகளின் காரணமாக அவருக்கு அவரது சட்டத்தரணியையோ குடும்ப அங்கத்தினரையோ சிறையில் சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
சிறைச்சாலையிலும் விழுந்து அவரது கை முறிந்த நிலையிலும் அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் தனது கையில் தொடர்ந்தும் வேதனையிருப்பதாகத் தெரிவிக்கிறார். ரிமாண்ட் சிறைச்சாலையில் தான் உளரீதியான பிரச்சினைகளுக்கு உட்பட்டதாகவும் கூறினார். ரிமாண்ட் சிறைச்சாலையிலிருந்து 5 ½ மாதங்களின் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
“நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்போது என்னால் தேவையான சிகிச்சைகளை பெறமுடியாமலிருந்தது’’ என்றார்.
கடந்த 21 ஆம் திகதி தான் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்;
இந்தப் பொய் குற்றச்சாட்டுகளினால் நானும் எனது குடும்பமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. குடும்ப அங்கத்தவர்கள் தாமும் பிரச்சினைக்குள்ளாக்கப்படுவோம் என அச்சத்தில் இருந்தார்கள். எனது பிள்ளைகள் பாடசாலை செல்பவர்கள். அவர்களின் கல்வியில் எனது கைது பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. மூன்று வருடகாலமாக சிஐடியினர் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்திக்கொண்டு வந்தாலும் எனக்கு எதிராக எந்த சாட்சிகளையும் ஆஜர்படுத்த அவர்களால் முடியாமற்போனது.
‘நான் தொடர்ந்தும் இவ்வாறான பொய் பிரசாரங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். சமூக ஊடக செயற்பாட்டாளர் என்ற வகையில் பொய்யான இனவாத பிரசாரங்களுக்கு எதிராக நிச்சயம் குரல் எழுப்புவேன் என்றார். – Vidivelli
Post a Comment