Header Ads



சார்ஜன்ட் ஹனீபாவின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் - பொலிஸ் மரியாதையுடன் உடல் நல்லடக்கம்




- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


பொலொன்னறுவை - வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் தங்கும் விடுதியில் இருந்து இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ரின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டுமென வலியுறுத்துவாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.


வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ற் ஆக கடமையாற்றி வந்த ஏறாவூரைச் சேர்ந்த மக்பூல் முஹம்மது ஹனீபா (வயது 52) என்பவரின் சடலம் பொலிஸ் விடுதியிலிருந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்தவாறு கடந்த சனிக்கிழமை 30.09.2023 மீட்கப்பட்டிருந்தது.


பொலொன்னறுவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் செவ்வாய்க்கிழமை 03.10.2023 சட்ட வைத்திய நிபுணரினால் உடற்கூராய்வு செய்யப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் இரவு  ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


சடலம் இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்ததை வைத்தும் சடலத்தில் காயம் இருந்ததனாலும் இது  கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் இரத்தப் போக்கு இடம்பெற்று மரணம் சம்பவித்திருப்பதாக பொலொன்னறுவை சட்ட வைத்திய நிபுணர் யூ.எல்.எம்.எஸ். பெரேராவின் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முழுநேர பொலிஸ் பாதுகாப்பிலுள்ள வெலிக்கந்தைப் பொலிஸ் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள பொலிஸார் தங்கும் விடுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம் தொடர்பாக கரிசனை எடுக்குமாறு மக்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர்  ரிரான் அலஸிடம் Tiran Alles தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.


இதற்கு இராஜாங்க அமைச்சர் டிலான் அலஸ் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததாகவும் சுபைர் தெரிவித்தார். நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நீதியும் சீர்குலைந்து பொதுமக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் அவநம்பிக்கையுடனும் வாழ ஒரு போதும்  வழி சமைத்துவிடக் கூடாதென்றும் தான் இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தியதாக சுபைர் மேலும்  தெரிவித்தார்.


கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இரத்தப் போக்கு ஏற்பட்டு மரணித்த பொலிஸ் சார்ஜன்ற் கடைசியாக அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு மயில்கள் மான்கள் வேட்டையாடப்படுவதாக கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டுக்கு அமைய பணிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவினருடன் சென்று கடமையில் ஈடுபட்டுத் திரும்பியிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.