மேற்குலகின் நிலைப்பாடு ஆபத்தானது - ரவூப் ஹக்கீம்
அதில் , அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் வெறுப்புணர்வை தூண்டவது உடனடியாக.நிறுத்தப்பட வேண்டும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , இஸ்ரேல்-பலஸ்தீன மோதலில் இரு தரப்பினரும் மேற்கொண்டுவரும்அனைத்து விதமான வன்செயல்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றது. தொடர்ச்சியாக அப்பாவி மனித உயிர்கள் கோரமாகக் கொலை செய்யப்பட்டு, காஸா பகுதியில் வசிக்கும் குடிமக்கள் மீது கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு கொடுமை இழைக்கப்பட்டு, பண்டைய உலக நாகரிகமொன்றின் "தொட்டில்" ஆகக் கருதப்படும் பிராந்தியத்தில், புனிதத் தலத்தைச் சூழவுள்ள பாரிய நிலப் பரப்பில் அவர்களது சன்மார்க்க வணக்க வழிபாட்டு உரிமையும் மறுக்கப்பட்டு,துன்புறுத்தப்பட்டு வருவது மனிதகுலத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாலஸ்தீனிய மக்களை பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றுவது, காரண,காரிய தொடர்பின்றி கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் வதை செய்வது என்பன ஐக்கிய நாடுகளின் சாசனத்தைக் கூட அலட்சியம் செய்து, மனித உரிமைகளை மீறி நடப்பவர்களின் உள்ளங்கள் மீது படிந்துள்ள அப்பட்டமான கறையாகும்.
முன்னெப்போதும் இல்லாதவாறு, அண்மைய மாதங்களில், தொடர்ந்து ஆத்திரத்தைத் தூண்டும் விதத்தில் இருந்து வரும் அனைத்து பயங்கரவாத செயல்களையும் கண்டிக்கும் அதே வேளையில், இரு நாடுகளின் நிலைபேறானமற்றும் நடைமுறைச் சாத்தியமான ரீதியான தீர்வை அடையும் நோக்கில், அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கையாண்டு , நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி ,1967 க்கு முந்தைய எல்லைக்குள் வரையறுத்து அமைதியும் செழிப்பும் நிலவத் தக்கதாக முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போதைய இஸ்ரேலிய தலைமைகள் ஒருதலைப்பட்சமாகவும்,வலுக்கட்டாயமாகவும் காண்பதற்கு முயற்சித்துவரும் "புதிய மத்திய கிழக்கு" என்பது நூற்றாண்டுகாலமாக நீடிக்கும் பழமையான இந்த மோதலை மேலும் அதிகரிக்கவே செய்யும். மனித நெஞ்சறையில் உயிர் மூச்சு உள்ள வரை பாலஸ்தீன மக்கள் சுதந்திரம் மற்றும் வழிபாட்டு உரிமை என்ற சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் உரிமைக்காக தங்கள் போராட்டத்தையும் வேட்கையையும் தொடர்வார்கள்.
ஆக்கிரமிப்பின் கீழ் அவதிப்படும் மக்களை மேலும் பின் தள்ளுவதற்காக சந்தேகத்திற்குரிய விதத்தில் நடந்துகொள்வோர் இராஜதந்திர தோற்றப்பாட்டை பயன்படுத்தும் விஷயத்தில் அவர்களின் உள்நோக்கம் குறித்து, மத்திய கிழக்கு, மற்றும் அரபு உலகில் உள்ள அனைவரும் மிகவும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
வெறுப்பு, வெறுப்பையே உண்டாக்கும். மேலும், போர்முனையில் ஒரு தரப்பினருக்கு எதிராக மற்றொரு தரப்பினரை ஊக்குவிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா ,மற்றும் ஐரோப்பாவின் கொள்கைகளில் இரட்டைத் நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன, இது இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல் தொடர்பான உத்தியோகபூர்வ அணுகுமுறையில் பெரிதும் பிரதிபலிக்கின்றது.
அத்துடன்,பிராந்தியத்தின் தலைமையாக இருக்க விரும்பும் இலங்கையின் அண்டை நாடொன்று இவ்வாறான பேரழிவுகளின் போது,உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியில் சற்று முதிர்ச்சியுடனும், விவேகத்துடனும், சமநிலையுடனும் செயல்படுவதே சாலச் சிறந்ததாக இருக்கும்.
Post a Comment