Header Ads



ஈஸ்டர் தாக்குதல் முஸ்லீம்களால் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர், ஆனால் உண்மையில் அவ்வாறல்ல


நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது. அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் யாழில் சனிக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .


மேலும் தெரிவிக்கையில்,


நீதியை நடைமுறைப்படுத்தும் நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே யாராவது நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீதிபதிக்கு தொல்லைகள் கொடுக்கக் கூடாது. ஆனால் இலங்கையில் நடைபெறுவது இவ்வாறான செயற்பாடுகள் அல்ல எல்லாமே ஒரு சிங்கள பௌத்த சிந்தனையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.


ஆகவே, ஒரு தமிழருக்கு சார்பாக ஒரு தமிழ் நீதிபதி தீர்ப்பு கொடுத்தால் ஒரு முஸ்லிமிற்கு சார்பாக ஒரு முஸ்லீம் நீதிபதி தீர்ப்புக் கொடுத்தால் சிங்களவர்கள் ஏதோ அவர்கள் தமிழர்களாக இருப்பதால் தான் இவ்வாறு தீர்ப்பு கொடுத்திருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்களே தவிர சிங்கள நீதிபதிகள் சிங்களவர்களுக்கு சார்பாக நீதி கொடுக்கின்றார்கள் என்று  சிந்திப்பதில்லை.


இதில் நான் தெரிவிப்பது நீதிபதிகள் சட்டத்தின் படி நடக்க தான் அவர்களிற்கு நாங்கள் பயிற்சி கொடுத்திருக்கின்றோம். அவர்கள் இவ்வாறு தான் செய்கின்றார்களே தவிர அதில் தமிழர், சிங்களவர் என்று பாகுபாடு பார்த்து அவர்கள் இதனை செய்யவில்லை இவ்வாறு நினைப்பது பிழையான ஒரு சிந்தனையாகும்.


இந்த சிந்தனையில் தான் இவ்வாறு இந்த நீதிபதிக்கு நடந்திருக்கின்றது என்பதுக்கு தெரிகின்றது.


இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றில் அவரை திரும்ப வரவழைத்து போதிய பாதுகாப்பு கொடுத்து அவரை மீண்டும் அதே பதவியை வகிக்க செய்யலாம்.  இது நடைமுறைக்கு சாத்தியமானதாக  இருக்கின்றதா என்பது தெரியவில்லை.


ஆனால் அரசாங்கம் ஒன்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தாவிட்டால் சிங்கள மக்களிக்குமிடையே இது மாதிரியான நிலைமைகள் ஏற்பட்டு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.


ஈஸ்ரர் தாக்குதலை எடுத்துப்பார்த்தோமாக இருந்தால் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட்தாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறு அல்ல. இது யாரோ ஒருவரின் அரசியலுக்காக ஒரு நாடகமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதே இங்கு பிரதானமாகும்.


அனைத்தையும் தீர விசாரித்து செயற்பாடு வேண்டும் என்பதே எனது பிரதான கருத்தாகும் எனவும் தெரிவித்தார். (வீரகேசரி)

No comments

Powered by Blogger.