Header Ads



போரியல் வரலாற்றில் முக்கிய பரிமாணம், இஸ்ரேலை தாக்கிய 7,000 ராக்கெட்டுகள் - அதிரடி காட்டும் ஹமாஸ் - ஓட்டம் பிடிக்கும் கள்ளக் குடியேறிகள்


இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது.


ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது.


இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர்.


காஸா பகுதியில் உள்ள இலக்குகளை ஹமாஸ் ஆயுதக் குழு தாக்கி வருவதாகவும் அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை மதிப்பிட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.


ஆப்பரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம் என்ற பெயரில் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதலின்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன், டெல் அவிவ் மற்றும் காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.


பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அதன் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தும் பிரிவு 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்துள்ளது.


"காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் இலக்கு வைக்கப்பட்டன" என்றும் ஆயுதக் குழுவினர் "வெவ்வேறு இடங்களில்" இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது.


இஸ்ரேலிய பொது ஊழியர்களின் தலைவர் "சூழ்நிலை மதிப்பீட்டை" நடத்தி வருவதாகவும், "இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் "தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க" அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.


ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது.


அஷ்கெலோன் நகரில் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகள் காட்டுகின்றன. அதில் வாகனங்கள் எரிந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் "அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்" ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலின் தற்காப்புப் படைக் குழுவின் ஆரம்ப அறிக்கை தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை "நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் - ஷபாத் மற்றும் சிம்சாட் தோராவின் விடுமுறை நாளில் சைரன்கள் ஒலிப்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வீசும் சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தனர். நம்மை நாமே காத்துக் கொள்வோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


தாக்குதலுக்கு இலக்கான இடங்களில் எரியும் தீயில் இருந்து கரும்புகை வெளியாகி வருகிறது.

இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவரான முகமது டெய்ஃப், "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலைத் தொடங்க சனிக்கிழமை அதிகாலை 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவப்பட்டதாகவும் கூறினார்.


"இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று டெய்ஃப் கூறினார்.


“நாங்கள் ஏற்கெனவே எதிரியை எச்சரித்துள்ளோம். இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக நேர்ந்த குற்றங்களால் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான தியாகிகள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்."


"ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின் தொடக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கோட்டைகளைக் குறிவைத்த முதல் தாக்குதலில் 5,000 ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம்."


ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "போருக்கான தயார் நிலை" பிரகடனம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களை அழைக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.


இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது என்பதுடன் ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.


இதற்கிடையே, தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, மேலும் இரண்டாயிரம் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹமாஸ் தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது.


இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த காட்சிகள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஹமாஸ் ஆயுதக் குழு மிக மோசமான தவற்றைச் செய்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.


யோவ் காலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இன்று காலையில் மிக மோசமான செயலைச் செய்துள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றும், இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெற்றிக்கொடி நாட்டும் என்றும் கூறியுள்ளார்.


ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. BBC

No comments

Powered by Blogger.