சவூதியில் நடந்த 2 சம்பவங்கள் (முழு விபரம் இணைப்பு)
- Rosy S Nasrath -
சவூதி, நஜ்ரான் பகுதியில் கடந்த செப்,20 அன்று நிறைவேற்றப்பட்ட முஹம்மது பின் முர்ஸல் என்பவருடைய மரணத்தைப்பற்றிய வீடியோ தான் இணையம் முழுக்க வியாபித்துள்ளது. சவூதி வரலாற்றில் வீடியோப்பதிவு செய்யப்பட்ட முதல் மரணதண்டனை நிறைவேற்றம் என்பதாக தம்லைன் போட்டு உலாவரும் அந்த வீடியோவில் நிறைய குளறுபடிகள் காட்டப்படுகிறது. மரண தண்டனை நிறைவேற்றும் (கழுத்து வெட்டப்படுவது தவிர்த்து) இதற்கு முன்னும் இதுபோல பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதுக்கு நெஞ்சைப்பிழியும் பின்னணி இசை வேற.
24 வயது முர்ஸல், தனது 12 வயது சித்தப்பா மகனை என்ன காரணத்திற்காக கொலை செய்ய வேண்டும்? அது எதுவும் விபத்தா? இல்லை விளையாட்டு் விபரீதம் ஆனதா? என்பதெல்லாம் தெளிவுற காட்டப்படாமல் சகட்டுமேனிக்கு தங்களுக்கு தோன்றியதை பேசி ,வீடியோ போட்டுக்கொண்டுள்ளனர். இதில் ஒரேயொரு பாகிஸ்தானி ஊடகம் தான் அதிலுள்ள விபரங்களை நமக்கு விளக்கியுள்ளது. இதில், அந்த கொலையாளி முர்ஸலின் முகத்திற்கு பதில் சவூதி பாடகர் நதீர் அல் ஷராரியின் முகம் வேறு தவறுதலாக காட்டப்பட்டு் வருகிறது. பாடகர் நதீர் சிலநாட்களுக்கு முன் விபத்தில் சிக்கிய ஒரு நியூஸையும் முர்ஸலுடைய மரணதண்டனை காட்சிகளையும் மிக்ஸிங் செய்து போலி வீடியோ தான் முழுக்க பரவியுள்ளது.
மறுபுறம் உலக சமூக ஊடக மக்களோ, சவூதியின் இந்த கொடூர தண்டனையை நிறுத்த வேண்டும்? நாகரீகம் அடைந்துவிட்ட காலத்தில் கழுத்தை வெட்டி கொல்வதெல்லாம் காட்டுமிராண்டித்தனம் இல்லையா? என்பதாக பேச ஆரம்பித்துள்ளனர். கொலைக்குற்றம் செய்த ஒருவனை அல்லது சந்தேகத்தில் பிடிபட்ட ஒருவனை அவன் ஆயுள் தொலையும் வரை சிறையில் வைத்து பூட்டிவிட்டு ,பின் அவன் செத்த பிறகு உடலை எடுத்து உறவினர்களிடம் கொடுக்கும் நீதிமன்ற தண்டனைகளுக்கு இது எவ்விதமாக கொடூரமாக தெரிகிறது என புரியவில்லை, அல்லது ஒருத்தனை தூக்கிலிட்டு கொல்லும் தண்டனைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? வெறும் நாட்கள் தானே?
120 ஆண்டுகால இந்திய சினிமாவில் ஆகப்பழைய கதைக்கருவே , தன் பெற்றோரை,தன் மனைவி-மக்களை கொன்றவனை தக்க சமயம் வர காத்திருந்து, திட்டந்தீட்டி, சரியான ஒருநாள் பார்த்து அவனை கொடூரமாக கொன்று தன் வஞ்சம் தீர்ப்பது தானே ? அதைத்தானே இப்போது வெளியான ஜெயிலர் வரையிலும் பார்த்து ரசித்தோம். ஆகவே பழிக்குப்பழி வாங்குவது என்பது சாதாரண மனிதனின் உளவியல் மாத்திரமல்லாது சமூகநீதி என ஒன்று காக்கப்படவேண்டுமானால் இப்படியான தண்டனைகள் தேவைதான் என்றே நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் கரடுமுரடாக தெரிந்தாலும் அது தான் ஒவ்வொரு சாமான்ய மனிதனின் மனசாட்சி.
குடும்பத்திலுள்ள 600 பேரும் அவர்களது கோடான கோடி சொத்துக்களை கொண்டுவந்து கொலையான சிறுவனின் தந்தை காலில் போட்டும், அவர் தன் மகனுடைய உயிர் மதிப்பை மலினப்படுத்தாது, அவற்றை உதறித்தள்ளியதில் இருந்து இக்கொலை திட்டமிடப்பட்டதாக அல்லது ஆத்திர ஆவேசத்தில் நிகழ்ந்த ஒன்றாகவே கருதமுடிகிறது. ஒருவேளை அவர் செல்வங்களை பெற்றுக்கொண்டு அவர் மன்னிப்பு கொடுத்திருந்தாலும், காசுக்கு ஆசைப்பட்டு ரோசத்தை விட்டுக்கொடுத்தான் என வேறு மாதிரி பேசவும் செய்வார்கள்.
இங்கே சவூதி அரசை கண்டித்து ஒரு புண்ணியமும் இல்லை, கொலை செய்யப்பட்டவனது உற்றார் உறவினர், கொலை செய்தவனை மனமுவந்து மன்னித்துவிட்டால் இதில் சவூதி அரசாங்கம் தடை போட முடியாது, அவன் விடுதலையாகி வெளியே வந்துவிட முடியும்...கொலையான சிறுவனது தந்தை வைக்கும் மரண தண்டனை கோரிக்கையை அரசு நிறைவேற்றுகிறது அவ்வளவே, நம் நாடு போல நீதிமன்றம் தானாக ஒரு தீர்ப்பை கொடுத்து ஏழு வருடங்களுக்கு சிறைவாசம் அனுபவித்து வெளியே வரும் போது அவனை பழிவாங்க எதிர்த்தரப்பு குடும்பத்தார் காத்திருப்பார்கள். அது தானே இந்தியாவில் தொடர்ந்து கொலைகள் நடக்க காரணமாகியுள்ளது. இதனை அரசு முன்னின்று செய்துவிட்டால்... அரசுக்கு பயந்து பழிவாங்கும் படலங்கள் இல்லாதுபோகும். அதை தான் இஸ்லாமிய சட்டம் செய்கிறது.
பாகிஸ்தான் செய்தி ஊடகம் ஒன்றில் கூறப்படுவது போல நாங்களும் முஸ்லிம் நாடு தான், இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் நாடு தான் ஆனால் எங்கள் நாட்டில் இப்படியான சட்டங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என்று, அதனால் தான் உங்க நாடு இப்படி இருக்கு என சொல்லத்தோன்றுகிறது.
தன் மகனைக் கொன்ற கொலையாளிக்கு மரண தண்டனை கொடுத்தே தீரவேண்டும் என விடாப்பிடியாக நின்ற அந்த தந்தை ,சிறிது காலம் கழித்து,தாம் எடுத்த முடிவு தவறு என்று கூட கவலைப்படலாம்...அதுவரை இது அவங்க நாட்டு சட்டம் என நாம் கடந்து போகணுமே தவிர...அதை விட்டு காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் நம்மை நல்லவர்களாக ஞாயவான்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்க கூடாது.
இதே சவூதியில், கடந்த மாதம் இதேபோல ஒரு அரபு பழங்குடியினத்தவன் ஒருவனை வேறொரு பழங்குடியினத்துக்காரன் கொலை செய்ய, அவனுக்கு மன்னிப்பு கேட்டு அவனது குடும்பத்தார் கொலையானவனின் வீட்டுக்குப் போய் மன்னிப்புக்கேட்க, அந்த குடும்பத்தார் தங்கள் மகனைக் கொன்ற அவனை மன்னித்துவிட்டனர்...அந்த தகவலையும் சேர்த்து பதிவு செய்யுங்கள்.
Post a Comment