Header Ads



நாமலின் திருமணம் - 26 லட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணத்தை செலுத்திய ராஜாங்க அமைச்சர்


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தியுள்ளார்.


நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காக இரண்டு தசம் ஆறு மில்லியன் ரூபாய் மின்சார சபைக்கு செலுத்த வேண்டியிருந்தது என தெரிவிக்கப்பட்டது.


இந்த சர்ச்சைக்குரிய கட்டண நிலுவையை தாம் இன்று(02.10.2023) செலுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.


இந்த கட்டண நிலுவை செலுத்தப்பட்டமை தொடர்பில் அமைச்சர் சனத் நிசாந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மரியாதை செலுத்தும் நோக்கில் இந்த மின்சார கட்டணத்தை தான் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


26 லட்சம் ரூபாய் மின்சார கட்டண நிலுவை இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது.


இந்த திருமண நிகழ்வில் பாதுகாப்பு நோக்கில் கூடுதலான மின் குமிழ்கள் ஒளிர விடப்பட்டதாகவும், இந்த செலவினை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வாய்மொழி மூலமாக கோரிக்கைக்கு அமைய இலங்கை மின்சார சபை இந்த மின்சார வசதியை வழங்கி இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் நாமல் ராஜபக்சவை திருமணம் செய்து இரண்டாவது குழந்தை பிறந்ததன் பின்னர் இந்த மின்சார கட்டணம் குறித்த பட்டியல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததாகவும் தாம் இந்த கட்டணத்தை செலுத்தி பிரச்சினையை முடிப்பதற்கு தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.