Header Ads



ஆப்கானிஸ்தானின் அபார சாதனை - உலகளாவிய தர வரிசையில் முதலிடம்


ஆசிய அண்டை நாடுகளுடன் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் பில்லியன்கணக்கான டாலர்கள் சர்வதேச உதவிக்கு நன்றி. கடந்த காலாண்டில் ப்ளூம்பெர்க்கின் உலகளாவிய நாணயங்கள் தர வரிசையில் ஆப்கானிஸ்தானின் நாணயம் முதலிடம் பிடித்துள்ளது.


வறுமை மற்றும் பட்டினியால் போராடும் நாட்டில் இப்படி நடப்பது மிகுந்த வியப்பை அளிக்கிறது.


ஆகஸ்ட் 15, 2021 அன்று, தாலிபன் போராளிகள் கிட்டத்தட்ட எந்த எதிர்ப்பும் இன்றி காபூலில் நுழைந்து, மேற்கத்திய ஆதரவில் செயல்பட்டு வந்த அஷ்ரப் கனியின் அரசை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அப்போதைய அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.


அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அவசரத்தில் இருந்தன. காபூல் விமான நிலையத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.


நாடு முழுவதும் ஒரு குழப்பமான சூழல் நிலவிய நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் அனைத்துமே குழப்பத்தில் மூழ்கியிருந்தது.


இருப்பினும், இது போன்ற அனைத்து வியத்தகு முன்னேற்றங்களுக்குப் பிறகு, தாலிபன் அமைப்பினர் படிப்படியாக தங்களது இரண்டாவது ஆட்சியை நாட்டில் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நாட்டை வழிநடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல.


தாலிபனின் கூட்டாளிகள் என்று அழைக்கப்படும் அண்டை நாடுகள் கூட ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த சர்வதேச அங்கீகாரம் இல்லாமல், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தடையற்ற இறக்குமதி-ஏற்றுமதி இல்லாமல், அரசாங்கம் எவ்வாறு பணம் சம்பாதிக்க முடியும்?


சர்வதேச உதவிகள் குவிந்துள்ளதே ஆப்கானியின் மதிப்பு அதிகரிப்பதற்குக் காரணம் என கருதப்படுகிறது.


தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். உலக வங்கியின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் கல்வியறிவின்மை, வேலையின்மை மற்றும் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளின் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளில் தத்தளித்து வருகிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 3.4 கோடி ஆப்கானியர்கள் வறுமையில் வாழ்கின்றனர். 2020ல் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக இருந்தது. சுமார் நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது மிகப்பெரிய எண்ணிக்கை.


இத்தனை ஏமாற்றங்களுக்கிடையில் ஆப்கானிஸ்தானின் கரன்சியான ஆப்கானியின் மதிப்பு ஆச்சரியமான விதத்தில் அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்த காலாண்டில் ஆப்கானிஸ்தான் ஆப்கானி உலகின் வலுவான நாணயமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


இன்றைய மதிப்பீட்டின்படி, ஆப்கானி ஒன்றின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 3.72 ஆகும். கடந்த மூன்று மாதங்களில் இந்த நாணயத்தின் மதிப்பு 9% அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒரு டாலருக்கு சுமார் 79 ஆப்கானிகளைக் கொடுக்கவேண்டியுள்ளது. அதே சமயம் இந்தியாவில் ஒரு டாலரின் விலை 80 ரூபாய்க்கு மேல் நிலவுகிறது. 


BBC

No comments

Powered by Blogger.