Header Ads



மனைவிக்கு விசித்திரமான, பரிசு வழங்கிய கணவன்


மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10 ஆயிரத்திற்கு வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக சஞ்சய் தனது மனைவியிடம் வாக்குறுதி அளித்து இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற பரிசை வாங்க வேண்டும் என்ற ஆசை, இந்தியா நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் தான் வந்தது என்று சஞ்சய் மேலும் தெரிவித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற பிறகு, தன்னால் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.


நானும், எனது மனைவியும் நீண்ட காலம் காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டோம். நான் அவரிடம் நிலவை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தேன். ஆனால், என்னால் அப்படி செய்ய முடியவில்லை. தற்போது எங்களது திருமணத்திற்கு பிறகு வந்த அவளின் முதல் பிறந்தநாளில், நான் அவருக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளிக்க வேண்டும் என நினைத்தேன்,” என்று சஞ்சய் மஹாட்டோ தெரிவித்து உள்ளார்.


தனது நண்பர் உதவியுடன், லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியதாக சஞ்சய் தெரிவித்தார். இதற்கான வழிமுறைகள் நடைபெற்று முடிய ஒரு ஆண்டுகாலம் ஆனதாக அவர் மேலும் தெரிவித்தார். நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றையும் சஞ்சய் மஹோட்டா தன்னிடம் வைத்திருக்கிறார்.


முன்னதாக 2020 ஆண்டு வாக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரை சேர்ந்த நபர் தர்மேந்திர அனிஜா, தனது மனைவிக்கு நிலவில் மூன்று ஏக்கர் நிலத்தை பரிசாக கொடுத்தார். தனது எட்டாது திருமண நாளை கொண்டாடும் வகையில், மனைவிக்கு நிலவில் நிலத்தை பரிசளித்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.

No comments

Powered by Blogger.