அனாதை இல்ல சகோதரியின் திருமணம் - வரலாற்றில் ஓர் ஏடு
بسم الله الرحمن الرحيم.
الحمد لله، والصلاة والسلام على رسول الله، وعلى آله وصحبه ومن والاه، أما بعد..
முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி அனாதை இல்ல சகோதரி ஒருவரின் திருமண வைபவம், கல்லூரியின் பழைய மாணவிகளின் ஏற்பாட்டில், 19-09-2023 செவ்வாய்க் கிழமையன்று கொத்தட்டுவ "நாஸ் கலாச்சார நிலையத்"தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பழைய மாணவிகள் இந்நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு தமது உள்ளத்தாலும்,உடலாலும்,பொருளாலும் தம்மாலான முயற்சிகளை சிறந்த முறையிலே மேற்கொண்டார்கள்.
இலங்கையில் முதன்மையானதும் பழைமை வாய்ந்ததுமான கல்- எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் இயங்கும் முஸ்லிம் சிறுவர் பராமரிப்பு மற்றும் குழந்தைகள் காப்பகம் (infants home) பகுதியில் 1980 ஆம் ஆண்டு தனது ஐந்தாவது வயதில் இணைந்து கொண்ட சகோதரி பரீனா ஃபாரூக் என்பவரின் திருமணம்தான் அது.இந்நிகழ்வு அதே அனாதை இல்லத்தில் கல்வி பயின்று,தற்போது குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சகோதரியின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
அல்ஹம்து லில்லாஹ்.
இவரைக் கைப்பிடித்தவர்,
மாலத்தீவை(Maldives)
சேர்ந்த சகோதரர்
அலி முஹம்மத் என்பவராவார்.
இறைவனுக்கே புகழனைத்தும்.!
بارك الله لهما وبارك عليهما وجمع بينهما في خير.!
இப்புதுமணத் தம்பதியருக்கு நிறைந்த அருள்வளத்தைக் கொடுத்து, மகிழ்ச்சியோடு வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்.
இவ்வைபத்தில் "ராபிததுஸ் ஸய்யிதாத்", முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவியும்,கல்லூரியின் பகுதி நேர விரிவுரையாளருமான அல் ஆலிமா ஸுல்பிகார் ஜுனைத், இணைத் தலைவியும் கல்லூரி அதிபருமான அல் ஆலிமா மஹீஸா நஸ்ருள்ளா, பிரதித் தலைவியும் முன்னாள் அதிபருமான அல் ஆலிமா ஜலீலா முஹம்மத் ஷபீக்,ப.மா.ச.நிர்வாக சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட இணைப்பாளருமான அல் ஆலிமா பர்ஸானா கபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன்,1973 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பகத்தில் முதல் பிள்ளையாக,ஒரு மாதக் குழந்தையாக இருந்த நிலையில் சேர்க்கப்பட்ட சகோதரி றம்ஸானியாவும், அதே அனாதையில்லத்தில் பராமரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இன்னும் சிலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதே குழந்தைகள் பராமரிப்பகத்தில் 8 மாதக் குழந்தையாக சேர்க்கப்பட்டு, அங்கு பராமரிக்கப்பட்ட சகோதரர் நாஸர் மொஹிடீனும் கலந்து கொண்டமை சிறப்பான விடயமாகக் காணப்பட்டது. சகோதரர் மொஹிடீன் அவர்கள் எமது கல்லூரி அனாதையில்லத்தின் பராமரிப்பகத்தில் வளர்ந்த அதேவேளை கள்எலிய அலிகார் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரம்,க.பொ.த.உயர் தரம் போன்ற அரசாங்கப் பரீட்சைகளுக்கும் தோற்றி,ஷரீஆக் கற்கை நெறியையும் பூரணமாகக் கற்று வெளியேறினார்.
அதன் பின்னர் திருமண வாழ்வில் இணைந்துகொண்ட அவர், மலேசியாவில் சட்டக் கல்வி பயின்று, தற்போது சட்டத்தரணியாக விளங்குகின்றார் என்பது எம் அனைவருக்கும் ஒரு நற்செய்தியாகும்.
1962 ஆம் ஆண்டு 10 அனாதை மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் அனாதை இல்லம், வரலாற்று நெடுகிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனாதைகளைப் பராமரித்து சமூகத்தில் சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளமை அந்த மண்ணுக்குக் கிடைத்த பெரும் பாக்கியமே.
அனாதை இல்லத்தின் மிக முக்கிய பகுதியான குழந்தைகள் பராமரிப்பகம் (Infant's Home) ஒரு மாத வயதைக்கொண்ட அதன் முதல் குழந்தை ரம்ஸானியாவில் ஆரம்பித்து, நூற்றுக்கணக்கானவர்களைப் பராமரித்து அறிவூட்டி ஆளாக்கியது மட்டுமல்லாமல், உறவுகள் இல்லாதவர்கள் கல்லூரி மூலமாகவே திருமணமும் முடித்துக் கொடுக்கப்பட்டு இன்று பேரப் பிள்ளைகளையும் கண்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இவை எமது கல்லூரியின் அன்றைய சிறந்த சேவைகளையே பறைசாற்றுகின்றன.
தாய்க் கல்லூரியை நம்பி வந்த இத்தகைய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுக்குப் பின்னர்,பழைய மாணவிகளே உரிமையான உறவுகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆகவே,No: 46 of 1991 ஆம் பாராளுமன்ற கூட்டமைப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் இந்தக் குழந்தைப் பராமரிப்பு நிலையம் கடந்த 13 வருடங்களாக மூடப்பட்ட நிலையில் இருப்பது பழைய மாணவிகளுக்கும் ஏன் ,முஸ்லிம்கள்அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தக்கூடிய ஓர் அம்சமாகும்.
கலையகத்தில் பிரதானமான ஒரு பகுதி பாராளுமன்ற சட்டத்தையும் மீறி, இல்லாமல் ஆக்கப்பட்டி ருக்கும் விடயம் இன்று சட்டத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
வெகு விரைவில் இந்நிலைமைகள் சீராக்கப்பட்டு,அனாதையில்லம் மீளமைக்கப்பட்டு, கைவிடப்படும் குழந்தைச் செல்வங்கள் இன மத வேறுபாடுகளின்றி,எம் கலையகத்திலே பராமரிக்கப்பட்டு சமூகத்தின் நற்பிரஜைகளாக உருவாக்கப்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக!
தகவல்:
ஊடகப் பிரிவு,
'றாபிததுஸ் ஸய்யிதாத்'
பழைய மாணவர் சங்கம்,
முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி,
கல் எளிய.
Post a Comment