Header Ads



மொறோக்கோ, லிபியா மக்களுக்காக நாம் என்ன செய்ய முடியும்..??



கடந்த வாரத்தில் வட ஆபிரிக்காவின் இரண்டு நாடுகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. 


ஒன்று மொரோக்கோ. அங்கு கடந்த வாரம் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் இதுவரை 3000 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மொரோக்கோவின் வரலாற்றில் 399 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெற்ற மிகப் பாரிய பூமியதிர்ச்சியாக கணிக்கப்படுகிறது. பெரும் பொருளாதார பேரழிவை அது ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.


மறுபுறத்தில் லிபியாவை டானியல் புயல் தாக்கியிருக்கிறது. இப்புயலினாலும், இரண்டு பாரிய நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் அங்கு இதுவரை 5300 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். 


லிபியாவின் கிழக்கு நகரங்களான பெங்காசி, சூஸா, அல்பைழா, அல்மரஜ் மற்றும் திர்னா போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திர்னாவின் முக்கிய பல பகுதிகள் 100 வீதம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த நாட்பது ஆண்டுகளில் பெய்யாத மழைவீழ்ச்சியுடன் டானியல் புயல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்நிலையில் அம்மக்களின் துயர் துடைக்கும் பணியில் உலக நாடுகள் பல ஈடுபட்டுள்ளன. இப்பேரழிவின் கோரக்காட்சிகளை பார்க்க முடியாமல் இருக்கிறது. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அப்பாவிகளின் அழுகுரல்களைக் கேட்க முடியாமல் இருக்கிறது. 


முஃமின்கள் ஒரே உடம்பைப் போன்றவர்கள் என இறைத்தூதர் (ஸல்) குறிப்பிட்டார்கள். 'அதன் ஒரு உறுப்பு நோயுற்றால் ஏனைய உறுப்புக்கள் அதற்காக விழித்திருக்கும் , வலியை உணரும்' என்று அன்னார் சொல்லியிருக்கிறார்கள். 


இங்கிருந்து பல்லாயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் பேரனர்த்தத்தில் அகப்பட்டுள்ளவர்களுக்காக எம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்ய வேண்டும். 


பேரழிவுகள் சோதனையாகவும் தண்டனையாகவும் அருளாகவும் படிப்பினையாகவும் பார்க்கப்படுகிறது. எம்மைப் பொருத்தவரை இவ்வனர்த்தங்களின் போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்து எமக்கு ஒரு சோதனையாகக் கூட அமையலாம். 


ஆகக் குறைந்தது அவர்களை எமது பிரார்த்தனைகளிலாவது இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களது துக்கங்களில் உணர்வு ரீதியில் நாமும் பங்கெடுப்போம்.


Mohamed Basir

No comments

Powered by Blogger.