Header Ads



விமான பொறியியலாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை - ஶ்ரீலங்கன் விமானங்களுக்கு என்ன நடக்கப் போகிறது..?


ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (01) கலந்துரையாடப்படவுள்ளது. 


ஶ்ரீ லங்கன் விமான நிலைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.


கடந்த சில நாட்களாக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் பல விமானப் பயணங்கள்  தாமதமடைந்ததுடன், சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன. 


இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. 


நேற்றும் இரண்டு விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன.


இந்நிலையில், கடந்த சில நாட்களாக விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. 


இவ்வாறான சந்தர்ப்பங்கள் சாதாரணமானவை என  விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது. 


விமான பராமரிப்பு ஒரு நுணுக்கமான செயற்பாடு எனவும் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்தம் தெரிவிப்பதாக கூறியுள்ள ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், இவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளது. 


இதேவேளை, ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் உரிமம் பெற்ற விமானப் பொறியியலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஒரு விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை உரிமம் பெற்ற விமான  பொறியியலாளர்களே சரிபார்க்கின்றனர்.


விமானமொன்று வானில் பறப்பதற்கு உரிமம் பெற்ற விமான  பொறியியலாளர்களின் சான்றிதழ் அத்தியாவசியமாகும். 


அத்துடன், உரிமம் பெற்ற விமான பொறியியலாளர்கள் விமானத்திற்கான தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதோடு, அவற்றின் தரத்தையும் பராமரிக்கின்றனர்.


ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் 160 உரிமம் பெற்ற விமான பொறியியலாளர்கள் கடமையாற்றுகின்றனர். 


நாட்டின் பொருளாதார நிலைமைக்கு மத்தியில், அதில் உரிமம் பெற்ற 35 விமான பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 


மேலும் உரிமம் பெற்ற  25  விமான பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் எதிர்ப்பார்ப்பில் உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாக உரிமம் பெற்ற விமான பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.