"நிச்சயமாய் முஸ்லிம்களிடமிருந்து, ஆபத்து வராது"
“ஔரங்கசீப், பாபரால்கூட சநாதன தர்மத்தை ஒழிக்கமுடியவில்லை.” என்று பேசியிருக்கிறார் உபி முதல்வர் யோகி சாமியார்.
யோகி சாமியார் அவர்களே,
ஒரு செய்தி தெரியுமா உங்களுக்கு?
அந்த மன்னர்கள் இந்து மதத்தையோ சநாதன தர்மத்தையோ ஒழிக்க வந்தவர்கள் அல்லர்.
சொல்லப்போனால் அத்தகைய மன்னர்களின் சேவைகளால்தான் சநாதன தர்மமும் இந்து தர்மமும் இன்றும் நடைமுறையில் உள்ளன.
தன்னுடைய குடிமக்களான இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் பாபர் கொண்டிருந்த மரியாதைக்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன்.
தம் மகனுக்கு அவர் சொன்ன அறிவுரை-
“மகனே, இந்துக்கள் பசுவைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆகவே உனது ஆட்சியில் பசுவைக் கொல்ல அனுமதிக்காதே.”
போதுமா சாமியார் அவர்களே?
மன்னராட்சியாக இருந்தும்- அதுவும் முகலாய மன்னராட்சியாக இருந்தும் இந்து மதம் மதிக்கப்பட்டது.
நல்லிணக்கம் பேணப்பட்டது.
ஆனால் இன்றைய ஜனநாயக ஆட்சியில், நீங்கள் ஆளும் உபியின் கதை என்ன? நான் சொல்லவேண்டிய தேவையே இல்லை.
அடுத்து ஔரங்கசீப்.
“கோவிலை உடைத்தார், சிலைகளை உடைத்தார்” என்பனவெல்லாம் ஆங்கில வரலாற்றாசிரியர்கள் கட்டிவிட்ட கதைகள்.
ஔரங்கசீப் பற்றிய உண்மையான வரலாறுகளைச் சொல்லும் புத்தகங்கள் நிறைய வந்துவிட்டன, தெரியுமா சாமியார் அவர்களே?
ஔரங்கசீப் கொடுமையானவர் எனில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆண்டது எப்படி?
அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் ஒரே நாடாக இணைக்கப்பட்டது.
அதாவது “ஒரே நாடு ஒரே மக்கள்” என்கிற நல்லாட்சியை நடத்தினார் ஔரங்கசீப்.
இந்துக்களையும் இந்து ஆன்மிகவாதிகளையும் ஔரங்கசீப் பெரிதும் மதித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குமர குருபரர் காசியில் ஒரு மடம் அமைக்கத் தீர்மானித்தார்.
ஔரங்கசீப்பிடம் கோரிக்கை வைத்தார்.
அனைத்துவிதமான உதவிகளையும் தயக்கமின்றிச் செய்தார் மன்னர் ஔரங்கசீப்.
காசியில் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது அந்த மடம்.
காசி வேறு எங்கும் அல்ல, உபியில்தான் இருக்கிறது சாமியார் அவர்களே. நேரில் பார்த்துகூட நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஆகவே பாபரும் ஔரங்கசீப்பும் மட்டுமல்ல, இந்தியாவை ஆண்ட எந்த முஸ்லிம் மன்னருக்கும் இந்து மதத்தையோ சநாதன தர்மத்தையோ ஒழிக்கும் எண்ணம் இருந்ததில்லை.
சாமியார் அவர்களே,
பாபரும் ஔரங்கசீப்பும் மன்னர்கள். ஆயினும் அவர்களிடம் இதர மதங்கள் மீது வெறுப்பு இருந்ததில்லை.
நீங்கள் துறவி.
வெறுப்பு அரசியலைத் தவிர உங்களிடம் வேறு என்ன இருக்கிறது?
சநாதனத்திற்கோ இந்து மதத்திற்கோ ஏதேனும் ஆபத்து எனில் அது நிச்சயமாய் முஸ்லிம்களிடமிருந்து வராது.
அதற்கு உங்களைப் போன்ற சங்பரிவார் சாமியார்களே போதும்.
இனியாவது துறவு என்றாலே அன்புதான் என்று உணர்ந்து செயல்படுங்கள்.
-சிராஜுல்ஹஸன்
Post a Comment