Header Ads



பிள்ளையான் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது, ஈஸ்டர் தாக்குதலை ஐ.நா. விசாரிக்க வேண்டும் (வீடியோ)


(பாறுக் ஷிஹான்)


போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க  அனுமதிக்க முடியாது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த ஆசாத் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தினால் மக்கள் பல்வேறு சந்தேகங்களுடன் இப்போது இருக்கிறார்கள்  என  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போது  முஸ்லீம் மக்கள் மீது சிலர் சுயநலத்திற்காக  பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தொடர்பில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்    விசேட செய்தியாளர் சந்திப்பு  திங்கட்கிழமை(11)  இரவு   இடம்பெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு கருத்து தெரிவித்த அவர்


சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ள  பிள்ளையான்    தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை மீண்டும்   பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும்.சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ளதை பல இடங்களில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்  தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை மீண்டும் மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போது  முஸ்லீம் மக்கள் மீது சிலர் சுயநலத்திற்காக  பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது எம்மால் ஏற்க முடியாது.நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.


மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தாக்குதல் தொடர்பிலான  மௌலானாவின் ஊடக கருத்தினை  அடிப்படையாக கொண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஜனாதிபதி நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும் விசாரணைக்காக நியமிக்கப்பட வேண்டும் .கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுஇ பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கைகள் மழுப்பல் நிலையிலையே வெளிவந்தது.


 அதில் யாருக்கும் திருப்தியில்லை. இந்த தாக்குதலானது பாரதூரமான விளைவுகளை உண்டாக்கிய ஒன்றாகும்.இந்த விடயம் தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் புலனாய்வு அறிக்கைகள் பெறப்பட வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குகளின் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவருகிறார். இந்த தாக்குகளில் முஸ்லிங்களும்இ கிறிஸ்தவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.என்றார்.


ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து  அரசியல் முதலைகளும்  அதனை கட்டுப்படுத்துகின்ற பெரிய  ஊடக நிறுவனங்களும் அன்று ஒரு  பிழையான கண்ணோட்டத்தில்   நாட்டில் சமூக சேவை செய்த அமைப்புகள்  இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லீம் தலைவர்களை கூட கண்டி தலதா மாளிகையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு இராஜனாமா செய்ய வைத்தார்கள்.அன்று அரசில் இருந்த 13 க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சுப்பதவியை இராஜனாமாச் செய்திருந்தோம்.


அந்த அளவிற்கு தெற்கில் பாரிய  முஸ்லீம் விரோத அரசியல் வீசியது.அக்கால கட்டத்தில் இந்த நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல ஏழை வசதி குறைந்த  மாணவர்களுக்கு கல்விக்கு நிதியுதவி செய்த அமைப்புகள் பாடசாலைகளின் உட்கட்டமைப்புகளை மேற்கொண்ட பல முஸ்லீம்  அமைப்புகள் தடை செய்யப்பட்டன.அந்த அமைப்புகள் மீதான விசாரணைகள் கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற நிலையில்  சேவை மனப்பாங்கு கொண்ட 5 அமைப்புகள் தொடர்பில் தடை நீக்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.


தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் குறித்த 5 அமைப்புகளும் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.இதே வேளை தேசிய பாதுகாப்பினை விரும்புகின்ற நாம் குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய கோட்பாட்டில் நடாத்தப்பட்ட தாக்குதலாக  பார்க்காமல் அரசியல் தேவைக்காக  ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கிய உத்தியாகவே இந்த  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத  தாக்குதலை  நாம் பார்க்கின்றோம்.


தற்போது உள்ள மனித உரிமை ஆணையாளர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என கூறியிருக்கின்றார்.எனவே ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக (ICC) இத்தாக்குதலை ஒரு பாராதூரமான விடயமாக கருதி சட்ட ஏற்பாடுகளையும் விசாரணை பொறிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். என்றார்.



No comments

Powered by Blogger.