புகையிரத்தில் ரஷ்யாவை சென்றடைந்த வடகொரிய அதிபர்
கைகுலுக்கிக் கொண்ட இரு தலைவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டன்ர்.
"உங்களது நெருக்கடியான அலுவல்களுக்கு மத்தியில் எங்களை அழைத்ததற்கு நன்றி" என்று கிம் ஜாங் உன் அப்போது கூறினார்.
பின்னர் ராக்கெட் ஏவுதளத்தை கிம்முக்கு புதின் சுற்றிக் காட்டினார்.
பொதுவாக உலகத் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது ரயிலைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், விமானத்தில் பறந்தால் எளிதில் சுட்டு வீழ்த்தப்படும் ஆபத்து இருப்பதால் கிம் ஜாங் உன் எப்போதும் ரயில் பயணத்துக்கு முன்னுரிமை அளிக்கிறார்.
குண்டு துளைக்காத ரயில் மூலம் பயணம் செய்யும் போது, அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்பதால் அது பாதுகாப்பான பயணமாக இருக்கும் என கிம் நினைக்கிறார். இருப்பினும் சாட்டிலைட் படங்கள் மூலம் அவரது ரயில் பயணித்த பாதையை அறிய பிபிசி முயன்றது. ஆனால், அந்தப் படங்களும் கிடைக்கவில்லை.
இதற்கு முன் இப்படி ஒரு பயணத்தை அவர் மேற்கொண்ட போது, ஒரு பாதுகாப்பு ரயில் முன்னரே அந்த ரயில் பாதையில் ஆபத்து ஏதேனும் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்வதற்காகவே சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டுக்கு ஆயுத விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரிய அதிபரின் பயண வழித்தடம் திடீரென மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரிய தலைவர்கள் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் பாரம்பரியத்திற்கு ஏற்ப, மெதுவாக நகரும் ரயில் வண்டியில் சுமார் 1,180 கிலோ மீட்டர் (733 மைல்கள்) பயணம் செய்ய கிம் ஜாங் உன் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட வேண்டியிருந்தது. சிறந்த பிரெஞ்சு ஒயின்கள் மற்றும் புதிய இரால் உணவுகளை வழங்கும் வசதியும் இந்த ரயில் வண்டியில் இருக்கிறது.
ரயில் அதன் பலத்த கவச பாதுகாப்பு காரணமாக மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் (31 மைல்) வேகத்தில் சலசலத்துச் சென்றது.
லண்டனின் அதிவேகமாகப் பயணிக்கும் ரயிலுடன் ஒப்பிடுகையில், இந்த ரயில் நான்கு மடங்கு வேகம் குறைவானது. ஜப்பானில் ஓடும் புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
பூமியின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்ட ரயில் பயணம், சில நேரங்களில் தொன்மையான ரயில் வலையமைப்பைக் கடந்து செல்லவேண்டியிருந்தது.
இந்த ரயிலுக்கு கொரிய மொழியில் டேயாங்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது, கொரிய மொழியில் அதற்கு சூரியன் என்று அர்த்தம். மேலும் வட கொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் அடையாளக் குறிப்பாகவும் இச்சொல் அறியப்படுகிறது.
இப் பயணத்தின் இறுதியாக கிம் ஜாங் உன் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரை அடையத் திட்டமிட்டிருந்தார். ஆனால், பின்னர் அவருடைய ரயில் அந்நகரை விட்டு விலகி வடக்கு நோக்கி நகர்ந்தது. அவருடன் ராணுவ உயரதிகாரிகளும் பயணம் மேற்கொண்டிருந்தது, ஆயுத விற்பனை குறித்த பேச்சுக்களுக்கான சாத்திய கூறுகளை பறைசாற்றியது.
Post a Comment