Header Ads



செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை


கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை ஐக்கிய சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் கையெழுத்துகள் இதில் திரட்டப்பட உள்ளன.


திருகோணமலை -நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் கடந்த 28ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசமாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும்  இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள் என ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்திருந்தார்.


பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.


இந்நிலையில், ஆளுநரை பதவி விலக்க வேண்டுமென வலியுறுத்தியே ஒரு இலட்சம் கையெழுத்தை திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய சங்கம் ஆரம்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.