Header Ads



சுவிற்ஸர்லாந்தில் கோயில்களை, இலக்குவைக்கும் கொள்ளையர்கள்


சுவிஸில் உள்ள இந்து கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆலய நிர்வாகத்தினர் இவ் விடயம் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


சுவிஸ் சட்டம் குற்றவியல் பின்னணி கொண்ட குடியேற்றக்காரர்களுக்கு எதிராக கடுமையாக்கப்பட்டு இருப்பதால், ஏனையா நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொது இடங்களில் தொடர் கொள்ளைகள்  நடைபெறுவது குறைவாக இதுவரை காணப்பட்டு வந்துள்ளது.


இருப்பினும், கடந்த ஆண்டு முதல் இந்துக் கோயில்கள் திட்டமிட்டுக் குறிவைத்துக் கொள்ளையிடப்பட்டு வருவதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, கடந்த ஓகஸ்ட் 2023 முதல் இன்றுவரை 20இற்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்ககப்பட்டு நள்ளிரவிலும் அதிகாலையிலும் தொடர் கொள்ளைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


சுவிஸில் உள்ள பல இந்து கோவில்களில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 


கொள்ளைகள் காரணமாக இந்துக்கோவில்களுக்கு பொருள் இழப்புக்களும், சமய நெறிகள் மீறிய இடராகவும் உள்ளது.


கோவில்களில் உள்நுழையும்போது கடைப்பிடிக்கப்படும் திருத்தன்மை கொள்ளையர்களால் மீறப்பட்டதுடன், பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார் ஒரு கோவில் நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்கின்ற ஒருவர்.


கோவில்களின் கண்காணிப்பு நிகழ்ப்படக் கருவிகளில் கொள்ளையர்களின் பதிவும் கண்டெடுக்கப்பட்டதுடன், சில இடங்களில் கொள்ளையர்களின் கையடையாளமும் பொலிஸாரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


சில கோவில்களில் கொள்ளை நடவடிக்கைகளில ஈடுபட்ட கொள்ளையர்கள் பிரான்ஸ் நாட்டு வண்டி இலக்கத்தகடுடன் வந்திருப்பதனையும், அவர்களின் இருவர் வெள்ளை நிறத்தவர் எனவும் ஒருவர் தமிழராக இருக்கலாம் எனும் ஐயமும் நிலவுகின்றது.


பாதிப்பிற்கு உள்ளான சில கோவில்கள் பொலிஸில் புகார் அளித்துள்ளன. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன் ஐயப்பாடு வெளிக்காட்டும் தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி மேலும் பாதிப்புக்கள் ஏற்படாது காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார்கள் என்று கூறுகின்றார்கள் சில கோவில்களின் நிர்வாகத்தினர்.


இது இவ்வாறு இருக்க, சுவிசிற்குள் தற்போது குற்றவியல் நோக்கில் பல நாட்டவர்களும் நுழைந்திருப்பதும் அவர்கள் தமிழர்களைக் குறிவைத்து கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டு வருவதும் பலருடைய வாய்மொழித் தகவலில் இருந்து அறியமுடிகின்றது.  


தொடருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழர் அருகில் வந்த நபரால் அவரது களுத்தில் இருந்த தங்க நகையினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச்சென்ற செயல் கடந்த 19.08.23 பேர்ன் நகரில் நடைபெற்றுள்ளது.


சுவிஸில் 26 மாநிலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு சிறுகுடியரசாகவே இயங்குகின்றன. 26 மாநில பொலிஸாரையும் ஒருங்கிணைக்கும் சுவிஸ் நடுவனரசின் பொதுக்காவற்துறை துப்புத்துலக்க காலம் எடுத்துக் கொள்ளும்.


இந்நிலையில், விழாக்காலங்களில் பெறுமதிமிக்க நகைகளை அணிவதையும், அதுபோல் வீடுகளில் பாதுகாப்பு அற்று பெறுமதி மிக்க பொருட்களை அல்லது பணத்தை வைத்திருப்பதனையும் மக்கள் தவிர்ப்பதும் எப்போதும் விழிப்புடன் இருப்பதுமே தற்போதைய சூழலிற்குஒரே தீர்வாக அமையும். 

No comments

Powered by Blogger.