Header Ads



ஈஸ்டர் தாக்குதல் மீள் விசாரணையை ஷானியிடம் ஒப்படையுங்கள், பாரபட்சமின்றி செயற்படும் நீதிபதிகள் இடமாற்றம் - சஜித்

தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.


சமகாலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் ஊடகங்கள்,அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை நசுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக இங்கு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டைப் பேணுவது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறே,அரசாங்கம் ஊடகங்களை நசுக்குவது சர்வாதிகார இயல்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைத் தன்மை மீண்டும் மீண்டும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்,உயர்த்த ஞாயிறு தொடர்பான மீள் விசாரணையை இது தொடர்பான அறிவும் அநுபவமும் உள்ள ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்குமாறும்,2019 பொதுஜன பெரமுனவுக்கு இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்கவே மக்கள் ஆணை வழங்கினர் என்றும் அவர் தெரிவித்தார்.


எமது நாட்டில் வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்தி ஜனாதிபதி பதவியைப் பெற்று,அரசாங்கம் அமைத்து,அமைச்சுப்பதவிகளையும் பெற்று இன்று இது பற்றி தவறான கருத்துக்களை வெளியிடுவதில் அர்த்தமில்லை என்றும், எங்களுக்கு உண்மை மட்டுமே வெளிப்பட வேண்டும் என்றும்,சேறுபூசும் அரசியலில் ஈடுபட நாங்கள் தயாராக இல்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்திய ஷானி அபேசேகர சிறையிலடைக்கப்பட்டதன் மூலம் சில விடயங்கள் பற்றிய உண்மை புலப்படுவதாகவும்,இந்த தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை கைவிலங்குகள் இல்லாமல்,கழுத்தில் கயிறுகள் பிணைக்கப்படாமல் ஷானி அபேசேகரவிடம் வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார். 


No comments

Powered by Blogger.