நீர்கொழும்பு மக்களின் முன்மாதிரியான செயற்பாடு
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு, கடற்கரை தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள மீனவ கிராமத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதனால் அதனை தடுத்து நிறுத்துமாறு கிராம வாசிகள் ஒன்றுதிரண்டு பொலிஸ் நிலையம் வந்து கோரிக்கை விடுத்தனர்.
குறித்த மீனவ கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகரித்துள்ளதுடன் இளம் பெண்களும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஈக்கிராமத்திலுள்ள 14,16 வயது இரு சிறுமிகள் ஐஸ் போதைப்பொருளை பாவிப்பது தெரியவந்ததை அடுத்து பொலிஸாரிடம் தெரிவித்ததன் பின்னர் கந்தக்காடு புனருப்தாபன நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பு நோக்கில் ஒன்று சேர்ந்த ஆண் பெண் கிராம வாசிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் வந்து பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியை சந்தித்து தமது பிள்ளைகளை பாதுகாக்க போதைப்பொருளை வியாபாரத்தை ஒழித்துத்தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இவர்களின் முறைப்பாட்டை பதிவு செய்த தலைமை பொலிஸ் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இங்கு வந்த கிராமவாசிகளில் சிலர் கருத்துத் தெரிவிக்கையில் நீர்கொழும்பு சிறிய ரோம் என அழைக்கிறோம் . ஆனால் இங்கு 36 "ஸ்பா" மசாஜ் நிலையங்கள் உள்ளன.விபச்சார விடுதிகள் உள்ளன. போதைப் பொருள் விற்பவர்களும் பாவிப்பவர்களும் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. இது எமது கிராமத்திற்கு மட்டும் உண்டானதல்ல. முழு இலங்கையின் நிலையும் இதுவே. ஊரை சீர்செய்தால் நாட்டை சீர் செய்ய முடியும். அந்த நோக்கத்திலேயே இங்கு வந்துள்ளோம்.
போதைப் பொருளுக்கு எதிராக எமது தேவஸ்தான பிதா செயல்பட்டபோது அவரை கத்தியால் குத்துவதாக அச்சுறுத்தல் விடுத்தனர். எனவே எந்தவொறு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் தலைமை அதிகாரி அதனை செய்வதாக உறுதியளித்தார். அவருக்கு எமது நன்றிகள் எனக்கு கூறினார்கள்.
Post a Comment