Header Ads



அசாத் மௌலானாவை உடனடியாக பிடிக்க வேண்டும், ஜனாஸா எரிப்பு பற்றி சர்வதேச விசாரணை தேவை,


- நூருல் ஹுதா உமர் -


ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசர தேவையாக உள்ளது.  அந்தத் தேவையை நிறைவேற்றும் அதே வேளையில், "தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு" மற்றும் "ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு" மற்றும் "ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு" போன்றவற்றின் அறிக்கைகளில் உள்ள அனைத்து பரிந்துரைகளையும் அரசாங்கம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமுல்படுத்த வேண்டும் என்பதே இந்த நாட்டின் அமைதியை விரும்பும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


அந்த அறிக்கையில் மேலும், அதேபோன்று மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானுக்கு அரசியல் ரீதியாக பலப்படுத்தி அனுசரணை வழங்கி ஊக்கப்படுத்தியதாக கூறப்படும் அரசியல் தலைவர்களை ஜாதி-மத வேறுபாடின்றி உடனடியாக கைது செய்ய வேண்டும்.  இவர்கள் போன்றோர்களின் தைரியத்தில் தான் சஹ்ரான் போன்ற தீவிரவாத கொள்கை கொண்ட மனித மிருகங்கள் எம்மத்தியில் அச்சமின்றி நடமாடியுள்ளது கவலையளிக்கிறது. 


அத்துடன் நாட்டை சீரழித்த பிரிவினைவாத போரின் போது முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்த முன்னாள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டு ஈஸ்டர் தாக்குதல் சதி பற்றி அறிந்து அதை மூடி மறைத்து மறைமுகமாக ஆதரித்த அசாத் மௌலானா போன்றோரை உடனடியாக கைது செய்ய இலங்கை அரசாங்கம் சர்வதேச ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்டவாறு அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதன் மூலமே ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகமும், அதனால் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகமும் சமமாக நீதியைப் பெற முடியும்.


அது மாத்திரமின்றி கொரோனா தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு எரிக்கப்பட்ட சடலங்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தேவை.  ஏனென்றால், கொரோனாவின் சடலங்களை தகனம் செய்வதற்கு அரசியல் சதித் திட்டங்கள் இருப்பதாக முஸ்லிம் சமூகம் பலத்த சந்தேகம் கொண்டுள்ளது. பிச்சைக்காரனின் புண் போன்று தகனம் செய்யப்பட்ட சடலங்களை வைத்து அரசியல் செய்யும் ஒரு கும்பல் இலங்கை அரசியலில் இருப்பதால், அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதை தவிர்க்கும் விதமாக எரிக்கப்பட்ட உறவுகளுக்கு  சர்வதேச விசாரணை மூலம் நீதி கிடைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். .


மேற்கூறிய விடயங்களுக்கு நீதி கிடைக்காமல் விட்டால் சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் மதவாத சக்திகள் இளைஞர்களின் மனநிலையை தங்களின் சந்தர்ப்பவாத பேராசைக்காக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கிறோம். எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த விடயங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.