Header Ads



சிறையில் இருந்த நான், எப்படி தாக்குதல் மேற்கொள்ள முடியும்..?


குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் இன்றைய தினம் -06- உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.


உயித்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதல் சம்பவமாகும்.


குறித்த குண்டுத்தாக்குதலை ஐஎஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர். தற்கொலை குண்டுத்தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலும் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.


எவ்வாறாயினும் ஹன்சீர் அஷாட் மௌலானா வெளிநாட்டில் தஞ்சம் கோருவதற்காக இதனை மறுபக்கம் திருப்புவதற்கு முயற்சிப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மதத்திற்காக மரணிப்போம் என சத்தியபிரமாணம் செய்த சிலர் சிறையிலும் வெளியிலும் இருக்கின்றார்கள். அவர்களை மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மதநிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுகின்றன. இதனை காப்பாற்றுவதற்கான ஹன்சீர் அஷாட் மௌலானா மேற்கொண்டுள்ள பலத்த முயற்சியே செனல் 4 நிறுவனத்திற்கான சாட்சியமளிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் நாட்டில் மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழலை உருவாக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டுவரையிலான காலப்பகுதியில் நான் சிறைச்சாலையிலிருந்தேன். அவ்வாறு சிறைச்சாலையிலிருக்கும் போது எவ்வாறு இவ்வாறானதொரு குற்றத்தை இழைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.


மேலும் ஹன்சீர் அஷாட் மௌலானா போன்றவர்கள் தங்கள் வாழ்விற்காக காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் சில தமிழ் அரசியல்வாதிகள் அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.