Header Ads



கண்டியில் குவிந்துள்ள ரசிகர்கள், மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும், வாகனங்களை நிறுத்த இடம்வழங்கி உழைக்கும் மக்கள்



ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.


இந்தப் போட்டி கண்டி - பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


இந்தப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள மத்திய மாகாணத்தில் இன்று 100 மி.மீ அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளதால் ஆட்டம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்தப் போட்டியைக் கண்டு மகிழ்வதற்காக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் இலங்கைக்கு வந்துள்ளதைக் காண முடிகின்றது.


கண்டி - பல்லேகல மைதானத்தை அண்மித்த பகுதிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் பெருமளவில் நடமாடுவதை அவதானிக்க முடிந்தது.


இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளுக்காக 9600 இலங்கை ரூபாவிற்கு டிக்கட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.


இதுவே நேற்று 1500 இலங்கை ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.


இந்த டிக்கெட்களை வாங்க பெருமளவிலான ரசிகர்கள், கண்டி - பல்லேகல மைதானத்திற்கு அருகில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.


எஞ்சியிருந்த டிக்கெட்களில் பெருமளவிலான டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த டிக்கெட்களை பெற்றுக்கொண்டவர்கள் மைதானத்தில் டிஜிட்டல் திரை மற்றும் புல் தரைகளை அண்மித்த பகுதிகளிலிருந்து போட்டிகளைப் பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


விலை குறைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.


கண்டி மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.


இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள மத்திய மாகாணத்தில் இன்று 100 மி.மீ மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.


இலங்கை மற்றும் பங்களதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற தருணத்திலும், மத்திய மாகாணத்தில் மழையுடனான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டது.


அதேபோன்றே, அன்றைய தினம் கண்டி மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவியது.


எனினும், கண்டி - பல்லேகல பகுதியில் மழையுடனான வானிலையினால் போட்டிகளுக்கு எந்தவிதத் தடையும் ஏற்படவில்லை.


இவ்வாறான நிலையில், பல்லேகல பகுதியில் இன்று மழையுடனான வானிலை நிலவவில்லை.


நேபாளத்துக்கு எதிரான முதல் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஒருவேளை மழை குறிக்கிட்டு இன்றைய ஆட்டம் நடைபெறாமல் போனால் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.


இதன் மூலம் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறும். இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தினால் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற முடியும்.


வாகனங்களை நிறுத்த அதீத கட்டணம்


கண்டி - பல்லேகல மைதானத்தை அண்மித்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை, அந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் வழங்கி வருகின்றனர்.


தமது சொந்த காணிகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியும் என்ற வகையிலான பதாகைகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.


இந்த நிலையில், வாகனம் ஒன்றை நிறுத்தி வைப்பதற்காக 1500 இலங்கை ரூபாய் அறவிடப்பட்டு வருகின்றது.


இதனால், குறித்த பகுதிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. BBC

No comments

Powered by Blogger.