Header Ads



துணிச்சலாக ஜனாதிபதியிடம் கருத்துக்களை கொட்டிய மாணவர்கள்


க.பொ.த. உயர்தரப்  பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.


திறமையான மாணவர்களுக்கு   ஜனாதிபதியின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் என்பன ஜனாதிபதியின் கரங்களினால்  வழங்கி வைக்கப்பட்டன.


அதன்படி, 2022ஆம் கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் முதல்  10 இடங்களுக்குத் தெரிவான  60 மாணவர்களும்,  2021 கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் தேசிய மட்டத்தில் முதல் 05 இடங்களைப் பிடித்த  30 மாணவர்கள்  உட்பட மொத்தம் 90 மாணவர்களும்  ஜனாதிபதியால்  கௌரவிக்கப்பட்டனர்.


06 உயர்தரப் பாடப்பிரிவுகளையும்   உள்ளடக்கி நாடளாவிய ரீதியில்  முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு  தலா 50,000 ரூபா ரொக்கப்பரிசுகளும், ஏனைய  இடங்களுக்கு தலா 25,000 ரூபா ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.


உயர்தரத்தில் சிறந்த  பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி,கல்வி   தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்தார்.


இங்கு    மாணவி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் , தனது நண்பர்களுடன் பேசும் போது, எதிர்காலத்தில் இலங்கையில் தான் மட்டும் எஞ்சியிருக்கும் நிலை ஏற்படுமா என்றஅச்சம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.   தனது    நண்பர்கள் அனைவரும் கல்வி கற்று முடிந்த பின்னர் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும், உயர்கல்வி பெறும் அனைவருக்கும் இலங்கைக்கு சேவை செய்வதற்கான வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் கூறினார்.


மற்றொரு மாணவி கருத்துத் தெரிவிக்கையில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவது இளவயது மாணவர்களே என்றும் அவர்களுக்குத் தேவையான பாடங்களை 40 நிமிடங்களாகப் பிரிப்பது அவர்களின் பாடம் தொடர்பான  அறிவைக் கற்கத் தடையாக இருப்பதாகவும்  தெரிவித்தார். மேலதிக வகுப்புகளில் பாட அறிவைக் கற்கும் கால அவகாசம் பல மணி நேரங்கள் என்றும் அதனால்தான் மேலதிக வகுப்புக் கல்வி வெற்றிகரமானது என்று பலர் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் கருத்துத் தெரிவித்த  மாணவி ஒருவர், உயர்தரத்திற்கு அரசால் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் உயர் தரத்தில் இருப்பதாகவும், அந்த பாடப் புத்தகங்களின் உள்ளடக்கங்களை மேலதிக கல்வி வகுப்புகளில் மேலும்  மேம்படுத்த முடியும் என்றும் கூறினார். நடைமுறைக் கோட்பாடுகளை அதிகப்படுத்துவதன் மூலமே உயர்தர மாணவர்களை பாடசாலையில் தக்கவைக்க முடியும் என்பது தனது கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.


2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில்  மிகச் சிறந்த பொறுபேறுகளைப் பெற்று  தற்போது பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் இரண்டாமிடம் பெற்றதாகத் தெரிவித்த  அவர் ,தான் சிறுவயது முதல் ஆடை வடிவமைப்பில்   ஆர்வம் கொண்டிருந்ததாகவும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில்  அந்தப் பாடநெறியைத் தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அந்தத் துறையில்  பட்டம் பெற்று இலங்கையில் தொழில் வாய்ப்புகள்பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.


எனவே, பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வு செய்யப்படும் போது, பட்டப் படிப்புக்கான பாடத்தை தெரிவு செய்வதில், அரசு வழிகாட்டுதல்களை வழங்கினால், திறமையான மாணவர்கள் குழுவை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இங்கு உரையாற்றிய பல்கலைக்கழக  முதலாமாண்டு   மாணவர் ஒருவர், பல்கலைக் கழகங்களில் உள்ள பிரச்சினைகளை அரசுடன் நேரடியாகப் பேசுவதற்கு தளமொன்று இல்லாததால், பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், எனவே, மாதம் ஒருமுறை அதற்கு தகுந்த வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம் அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் நிலவும் தவறான புரிதல்களையும் அவநம்பிக்கையையும் குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 13 வருடங்கள்  எடுக்காமல் அதற்கு முன்னர் அதற்கான  சந்தர்ப்பம் வழங்கினால் மாணவர்கள் பட்டப் படிப்பை விரைவாக முடித்து வேலைவாய்ப்பைப் பெற்று ஸ்திரமாக மாற வாய்ப்புக் கிடைக்கும் என   மற்றொரு மாணவர் தெரிவித்தார்.


இவ்வாறு  மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட  ஆலோசனைகளையும் கருத்துகளையும் செவிமடித்த ஜனாதிபதி அவை தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஜனாதிபதியுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் காலை உணவு மற்றும் பகலுணவு என்பனவும் வழங்கப்பட்டதோடு தாமரை கோபுரம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் என்பவற்றை மாணவர்கள் இலவசமாக பார்வையிட ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.


இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர்  ரந்துல அபேவீர இந்த நிகழ்வில் வரவேற்புரை  நிகழ்த்தினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்  சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் டபிள்யூ. ஏ. சரத்குமார, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மற்றும் அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

12-09-2023 

No comments

Powered by Blogger.