நாளை வெளிநாடு செல்லவிருந்த பெண்ணின், மரணம் தொடர்பில் மேலதிகத் தகவல்கள் வெளியாகின
இங்கிலாந்து குடியுரிமை பெற்ற குறித்த பெண், தனது 29 வயது காதலனுடன் சுமார் 6 மாதங்களாக அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கிஸ்ஸை அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து இளம் பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக இன்று (09) அதிகாலை 2.40 மணியளவில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
வெள்ளவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவனான தனது காதலனை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் நாட்டுக்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இருவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்ததுடன், குறித்த இளைஞனும் கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்று நாட்டிற்கு வந்துள்ளார்.
ஃபேஸ்புக் மூலம் இருவரும் காதல் உறவை வளர்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த பெண் நாளை அதிகாலை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த வேளை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
காதலனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் நேற்று இரவு சுமார் 6 பியர் கேன்களை குறித்த இளைஞர் அருந்தியுள்ள நிலையில், இரவு உறங்கச் சென்ற போது காதலியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
பின்னர் காதலியை தேடிய போதே சடலத்தை கண்டதாக பொலிஸாரிடம் இளைஞர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற இடத்தை கல்கிஸ்ஸை பதில் நீதவான் ரத்ன கமகே பார்வையிட்டார்.
நாளை (10) இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையின் பின்னர் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment