Header Ads



சஹ்ரானை ஏன் கைது செய்யவில்லை...?


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்களின் திணிப்பு என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள்  என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் இன்று (10.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும்  தெரிவிக்கையில், 


''உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்தது.


இருப்பினும் தங்களின் அரசியல் நோக்கத்துக்காக இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.



சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை நாடு என்ற ரீதியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தால் எவராலும் எதுவும் செய்ய முடியாது.



கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் தமது உயிரை தியாகம் செய்தார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.



அடிப்படைவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னிலை வகித்தார்கள். பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காக அவரை கைது செய்யவில்லை.



குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் 10 அடிப்படைவாத சம்பவங்கள் பதிவாகின.


வனாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்கள் களஞ்சியசாலை கண்டுப்பிடிக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் குறித்து நல்லாட்சி அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள், அமைச்சரவையின் உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களுடன் இணக்கமாக செயற்பட்டார். ஆகவே குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும்'' என்றார்.

No comments

Powered by Blogger.