சிங்கள தலைவரை தோற்றுவிக்க 9 முஸ்லிம்கள் தற்கொலை குண்டுத்தாரிகளாக மாறுவார்களா..?
வெள்ளைக் கொடி ஏந்தி வந்த அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என குறிப்பிட்ட சனல்4 தான் தற்போது ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல்4 ஊடகம் 15 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காணொளி தற்போது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவர் ஒருவரை உருவாக்குவதற்காக இந்த குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பின்னணியில் தான் சனல்4 இவ்வாறான காணொளிகளை வெளியிடுகிறது.
வெள்ளைக் கொடி ஏந்தி வந்த அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என குறிப்பிட்ட சனல்4 தான் தற்போது ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.
சனல்4 விற்கு முறைப்பாடு அல்லது தகவல்களை வழங்கியுள்ள அன்ஷிப் அசாத் மௌலானா என்ற நபர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடாக, ஊடக செயலாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நபர் சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளார்.
அன்ஷிப் அசாத் மௌலானா என்ற இந்த நபரின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 700 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
இவர் தான் தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவர் ஒருவரை உருவாக்க ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக குறிப்பிடுகிறார். இவருக்கு எதிராக பொலிஸில் நிதி மோசடி உள்ளிட்ட பல முறைப்பாடுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் முறையற்றது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் 2019ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஆனால் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றது.
ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் ராஜபக்சர்கள் மக்களாணையை பெற்றுக்கொண்டுள்ளார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அப்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், புலனாய்வு பிரிவினர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
மக்களாணையை வெல்ல குண்டுத்தாக்குதலை நடத்த வேண்டிய தேவை ராஜபக்சர்களுக்கு இல்லை. சனல் 4 குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.
தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை தோற்றுவிக்க 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுத்தாரிகளாக மாறுவார்களா? கோட்டாபய ராஜபக்ச இரண்டு வருடகாலம் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பல்வேறு காரணிகளால் அவர் பதவி விலகினார். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக்க செயற்பட்டவர்கள் தாம் இறக்கும் தருணத்தில் அதற்காக வேதனையடைவார்கள்.
நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்களில் ஊழலற்ற அரச தலைவராகவே கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அடிப்படைவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அவரை பதவி விலக்கினார்கள்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டார்.
Post a Comment