9 பந்தில் அரைச் சதம், 34 பந்தில் சதம் - நேபாள வீரர்களின் உக்கிரம்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது.
அதிக வேகமான அரைச் சதம், அதி வேகமான சதம் என, டி20 போட்டியில் 300 ரன்கள் என அந்த அணி படைத்த உலகச் சாதனைகள் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்திருக்கின்றன.
ஒரு வீரர் 9 பந்துகளில் அரைச் சதம் அடித்தார் என்றால் மற்றொரு வீரர் 34 பந்துகளில் சதமடித்தார். அரைச் சதம் அடித்த திபேந்திர சிங் சந்தித்த பந்துகளில் அவர் அடித்த ரன்கள் வரிசை இதுதான் 6,6,6,6,6,6,2,6,6,2.
இந்தப் போட்டியில் வீசப்பட்ட 120 பந்துகளில் 26 பந்துகள் சிக்சருக்குப் பறந்தன. மங்கோலியா அணியுடனான போட்டியில் நேபாள அணி வீரர்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தினர்.
இந்தப் போட்டியில் நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 314/3 என்ற அபாரமான ஸ்கோரை குவித்தது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை, 2019 இல் அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியின் 278 ரன்கள் என்ற முந்தைய அதிகபட்ச டி20 சாதனையை முறியடித்துள்ளது.
மங்கோலிய அணி வெறும் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டது.
நேபாள பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்ஸில் 26 சிக்ஸர்களை விளாசி தங்கள் பவர்-ஹிட்டிங் திறன்களை வெளிப்படுத்தினர். 20 போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்ஸின் போது எந்த அணியும் இவ்வளவு சிக்ஸர்களை அடித்தது இல்லை. 2019 இல் ஆப்கானிஸ்தானின் 22 சிக்ஸர்களை அடித்ததுதான் இதுவரையிலான சாதனை.
நேபாள அணியின் குஷால் மல்லா இந்தியாவின் ரோஹித் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் போன்ற டி20 ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்தார்
9 பந்தில் அரைச் சதம், 34 பந்தில் சதம்
நேபாள ஆல்-ரவுண்டரான திபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் அரைச் சதம் அடித்து புதிய உலக சாதனையைப் படைத்தார்.
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது இந்திய கிரிக்கெட் அணியின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை அவர் முறியடித்தார்.
அவர் சந்தித்த 10 பந்துகளில் 8 பந்துகள் எல்லைக் கோட்டுக்கு மேலே பறந்தன. அவரது ஸ்ட்ரைக் ரேட் 520. அவர் எடுத்த ரன்கள் 6,6,6,6,6,6,2,6,6,2.
இதே போல் நேபாள அணியின் குஷால் மல்லா இந்தியாவின் ரோஹித் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் போன்ற டி20 ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்தார். 34 பந்துகளில் அவர் சதம் அடித்தார்.
மொத்தம் 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 137 ரன்களை அவர் எடுத்தார்.
ரோஹித் மற்றும் மில்லர் ஆகியோர் இதற்கு முன் 35 பந்துகளில் சதங்களை பதிவு செய்திருந்தனர்.
வரும் அக்டோபர் 3 ஆம் தேதி காலிறுதியில் இந்திய அணி இந்தத் தொடரில் மோதவுள்ளது.
Post a Comment