Header Ads



மொராக்கோவின் மூன்றில் ஒரு பகுதி நிலநடுக்கத்தால் பாதிப்பு - உயிரிழப்பு 820 ஆக உயர்வு, மக்கள் வீதிகளில் தஞ்சம்


மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 820 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மரக்கேஷ் மற்றும் தெற்கில் பல பகுதிகளில் மக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் ஏன் கடினம்?

நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அட்லஸ் மலைத்தொடரில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு செல்வதில் பெரும் சிரமம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக பழைய கட்டடங்களால் ஆன கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்ல சில நாட்கள் ஆகலாம்.

மொராக்கோ கடற்கரையில் உள்ள கேனரி தீவுகள் மற்றும் அதன் கிழக்கு அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள மக்கள் கூட நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறுகிறார்கள்.

அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மராகேஷின் தெருக்களில் தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கின்றன.

நகரின் பழமையான சுவர்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் சமூக ஊடகத்தில் நிலநடுக்கம் தொடர்பாக உறுதிப்படுத்தாத வீடியோ கிளிப்புகள் காணப்படுகின்றன. அதில், சேதமடைந்த கட்டிடங்கள், கட்டிடங்கள் குலுங்குவது, இடிபாடுகளுடன் கூடிய தெருக்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் அச்சத்துடன் ஓடி வருவது, சிலர் கட்டிடங்கள் இடிந்ததால் எழுந்த புழுதிக்கு மத்தியில் நடப்பது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எனினும் இவை எந்த பகுதியில் எடுக்கப்பட்டவை என்பதை பிபிசி உறுதிப்படுத்தவில்லை.

மராகேஷில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துவிட்டன என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

நிலநடுக்கம் காரணம் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

"நாங்கள் மிகவும் கடுமையான நடுக்கத்தை உணர்ந்தோம். நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் இருந்தனர். குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், பெற்றோர்கள் கலக்கமடைந்தனர்" என்று அப்தெல்ஹாக் எல் அம்ரானி என்பவர் AFP செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நிமிடங்களில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடலோர நகரங்களான ரபாட், காசா பிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

No comments

Powered by Blogger.