500 பேருக்கு கண்சத்திர சிகிச்சை
இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஷ் ஸபாப் அமைப்பின்) ஏற்பாட்டில் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 27வது கண் சத்திரசிகிச்சை முகாம் இம்முறை சவூதி அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்பில் காத்தான்குடியில் 500 கண் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இச்சத்திர சிகிச்சை முகாமின் வைபவ ரீதியான ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் தலைமையில் இன்று (14) தள வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஜம்இய்யதுஸ் ஸபாப் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி. எம்.எஸ்.எம். தாஸீம், பிரதிப்பணிப்பளர் ஏ.ஜே.எம். வாரித், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
புணர்வாழ்வு, மனிதநேயப் பணிகளுக்கான மன்னர் சல்மான் மையத்தின் ஏற்பாட்டில் கண்பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு “சவூதியின் ஒளி” எனும் தொனிப் பொருளில் சுமார் 1000 கண் நோயாளர்களுக்கு கண் சத்திரசிகிச்சை வழங்கப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக இம்மாதம் 7ஆந் திகதி முதல் 12ஆந் திகதிவரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலஸ்முல்ல தளவைத்தியசாலையில் 500 பேருக்கும், இரண்டாங் கட்டமாக 13ஆந் திகதி தொடக்கம் 17ஆந் திகதிவரை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், மாவனல்லை மற்றும் குறுநாகல் பிரதேசங்களைச் சேர்ந்த 500 பேருக்கு காத்தான்குடி தளவைத்தியசாலையிலுமாக இக் கண் சத்திர சிகிச்சை முகாம் இடம்பெற்று வருகின்றது.
ஜம்இய்யதுஷ் ஸபாப் அமைப்பு கடந்த 22 வருடங்களில் கொழும்பு, மஹரகம, புத்தளம், அக்குரனை, நிந்தவூர், ஹம்பாந்தோட்டை, காத்தான்குடி ஆகிய இடங்களில் சுமார் 27 ஆயிரம் கண் நோயளர்களுக்கு சத்திர சிகிச்சையினை இலவசமாக வழங்கியுள்ளது.
இக்கண் சத்திரசிகிச்சைகளுக்கான வைத்தியர்குழு சவூதி அரேபிய நாட்டின் தமாம் பிரதேசத்தில் இயங்கிவரும் அல்பசர் சர்வதேச அமைப்பு தொடர்ச்சியாக இலவச மாக வழங்கி வருகின்றது. இம்முறை காத்தான்குடியில் இடம்பெறும் கண் சத்திர சிகிச்சையினை அல்பசர் சர்வதேச அமைப்பின் நிறைவேற்று அதிகாரி எம். பகுருதீன் தலைமையிலான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட குழு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி தளவைத்தியசாலை வைத்திய அதிகாரிகள், சர்வமத தலைவர்கள், ஊர் பிரமுகர்கள், மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் உட்பட அதன் பிரதிநிதிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment