Header Ads



சவூதி - இந்தியா இடையே புது உறவு, 50 ஒப்பந்தங்கள் கைச்சாத்து


சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.


இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்தியா - சௌதி அரேபியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


மோதி உடனான சந்திப்பின்போது சௌதி அரேபியாவின் முன்னேற்றத்தில் அங்கு வாழும் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து சௌதி இளவரசர் பெருமிதம் தெரிவித்தார்.


சௌதி வாழ் இந்தியர்களை தங்கள் நாட்டின் குடிமக்கள் போலவே பார்ப்பதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.


இதுகுறித்து சௌதி இளவரசர் மேலும் கூறும்போது, “சௌதி அரேபியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்திய சமூகத்தினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி, சௌதி அரேபியாவின் மொத்த மக்கள்தொகையில் இந்தியர்களின் பங்கு ஏழு சதவீதமாக உள்ளது.


இந்திய சமூகத்தினர் தங்களது நாட்டின் ஒரு பகுதியாக திகழ்கின்றனர். எங்கள் நாட்டு குடிமக்களின் நலன்களை போலவே, இந்தியர்களின் நலனிலும் சௌதி அரேபிய அரசு அக்கறை கொண்டுள்ளது,” என்று முகமது பின் சல்மான் தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் திங்கட்கிழமை நடைபெற்ற இந்தியா - சௌதி அரேபியா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் சௌதி இளவரசர் இவ்வாறு கூறினார்.


இருநாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த கவுன்சில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் முகமது பின் சல்மான் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்தியா - சௌதி அரேபியா இடையேயான இருதரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, சௌதி இளவரசர் உடனான பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.


இதுதொடர்பாக அவர் கூறும்போது, “இந்தியா- சௌதி அரேபியா இடையேயான வர்த்தக உறவு குறித்து நாங்கள் மதிப்பீடு செய்தோம். மேலும் இனிவரும் நாட்களில் இருதரப்பு பொருளாதார உறவும் வலுப்படும்,” என்றும் மோதி நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் அவர் கூறும்போது, “மின் வழித்தட இணைப்பு. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பாதுகாப்பு , செமிகண்டக்டர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா, சௌதி இடையேயான பொருளாதார ஒத்துழைப்புக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன” என்றும் மோதி அப்போது கூறினார்.


கடந்த 2019 அக்டோபரில் இந்திய பிரதமர் மோதி, சௌதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு பணிபுரியும் இந்தியர்கள் தொடர்பாக அவர் பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார்.


“சௌதியில் வாழ்ந்துவரும் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும், இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.


ஹஜ் யாத்திரை மற்றும் வணிக நோக்கங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் ஆண்டுதோறும் சௌதிக்கு வந்து செல்கின்றனர். சௌதியின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை கண்டு நாடு பெருமை கொள்கிறது,” என்று மோதி அப்போது கூறியிருந்தார்.


மேலும், “செளதியில் வாழும் இந்தியர்களின் கடின உழைப்பு, இந்தியாவின் பெருமையை அங்கு அதிகரிக்க செய்துள்ளது மற்றும் இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்த பேருதவியாக அமைந்துள்ளது.


சௌதி அரேபியா உடனான இந்தியாவின் உறவு இந்த விதத்தில் மேலும் வளர்ச்சிப் பெறும் என்று நம்புகிறோம்” என்றும் மோதி பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.


சௌதி அரேபிய இளவரசரை கௌரவிக்கும் நிகழ்ச்சி, இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.


கடந்த வார இறுதியில், டெல்லியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்திருந்தார்.


சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இம்மாநாட்டில் பங்கேற்ற அவர், கூடுதலாக ஒருநாள் டெல்லியில் தங்கினார். இருதரப்பு பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.


முன்னதாக, சௌதி இளவரசரை கௌரவிக்கும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் பேசும்போது, “இந்தியா வந்துள்ளதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவுக்கும், சௌதி அரேபிய தீபகற்பத்துக்கும் இடையேயான உறவு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது.


இந்தியா எங்களின் நட்பு நாடு; எங்களது வீட்டை போன்றது. இங்கிருந்து சௌதி அரேபியாவுக்கு வந்து பணியாற்றும் இந்தியர்கள், சௌதியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வருகின்றனர்,” என்று பேசினார்.


தமது இந்தப் பயணம் இந்தியாவில் சௌதி அரேபியாவின் பணிகளை முன்னிலைப்படுத்தும். இரு நாடுகளின் நலனுக்காக இந்த உறவு வலுப்படுவதையும் உறுதிபடுத்தும். இந்திய பிரதமர் மோதி தலைமையின் கீழ் இது நடக்கும் எனவும் முகமது பின் சல்மான் நம்பிக்கை தெரிவித்தார்.


ஜி 20 உச்சி மாநாட்டுக்கு பிறகு, இந்தியா மற்றும் சௌதி அரேபியாவுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.


சௌதி இளவரசரின் இந்தப் பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையேயான முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


எரிசக்தி, பெட்ரோகெமிக்கல்ஸ். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் மற்றும் தொழில் துறையை தவிர, சமூக மற்றும் கலாச்சார துறைகள் சார்ந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.


இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, இந்தியா- சௌதி அரேபியா இடையே சுமார் 50 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


சுமார் 50 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா - சௌதி அரேபியா முதலீட்டு மன்ற கூட்டத்தில், சௌதி அரேபியாவின் முதலீட்டு துறை இணை அமைச்சர் பத்ர் அல் பத்ர் பேசினார்.


அப்போது அவர், “இந்தியா - சௌதி இடையே பரஸ்பர முதலீட்டு திட்டங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இங்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அதிக வர்த்தகத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதத்திலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று பத்ர் கூறினார்.


இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, இந்தியா- சௌதி அரேபியா இடையே சுமார் 50 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தனியார் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சார்ந்த ஒப்பந்தங்களும் இதில் அடங்கும் என்று சௌதி துணை அமைச்சர் தெரிவித்தார்.


சௌதிக்கும், இந்தியாவுக்கு இடையேயான வர்த்தக உறவு, கூட்டு பரஸ்பர நலனை நோக்கமாக கொண்டது. ‘உங்கள் தேவை எங்கள் நிறைவேற்றம்; எங்களின் தேவை உங்கள் நிறைவேற்றம்’ என்பதை தாரக மந்திரமாக கொண்டது என்றும் பத்ர் கூறினார்.


சௌதி அரேபியாவில் முதலீடு செய்ய, இந்திய முதலீட்டாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.


இந்தியாவுக்கும், சௌதிக்கும் இடையிலான வர்த்தகம் சமீப காலத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. 2018 இல் 5.6 பில்லியன் டாலர்களாக இருந்த சௌதி அரேபியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி,2022 இல், 10.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.


இதேபோன்று, 2018 இல் 26 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவுக்கான சௌதி அரேபியாவின் ஏற்றுமதி, 2022 இல் 42 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் பத்ர் பெருமிதத்துடன் கூறினார்.


கொரோனா நோய்த்தொற்று உலகை அச்சுறுத்தி வந்த நேரத்தில், உலக அரசியலில் கொந்தளிப்பான சூழல் நிலவி வந்த தருணத்தில் இந்தியாவுக்கான சௌதியின் வர்த்தகம் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


இந்தியாவில் 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக 2019 இல் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் கூறியிருந்தார்.


குஜராத்தில் முதலீட்டு நிதி அலுவலகத்தை திறக்கும் சௌதி

அதே சமயத்தில், சௌதி அரேபியாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் அலுவலகம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திறக்கப்படலாம் என்று அந்நாட்டின் முதலீட்டு துறை அமைச்சர் காலித் அல் ஃபலித் கூறியுள்ளார்.


ஹாங்காங் போன்ற உலகளாவிய நிதி மையங்களுக்கு சவால் விடும் நோக்கில், குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தை உருவாக்குவது (GIFT City) ஒரு முக்கியத் திட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோதி தலைமையிலான அரசு இத்திட்டத்துக்கு நிதியுதவி செய்துள்ளது.


கிஃப்ட் நகரத்தில் சௌதி அரேபியா தனது அலுவலகத்தை திறக்க வேண்டும் என்ற இந்திய வர்த்தக துறை அமைச்சர் ஃபியூஸ் கோயல் அழைப்பு விடுத்தார்.


அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாக சௌதி அமைச்சர் காலித் அல் ஃபலித் உறுதி அளித்தார்.


இதேபோன்று, முதலீட்டை ஊக்குவிப்பதற்காக தனது அமைச்சகம், சௌதி அரேபிய தலைநகரான ரியாத்தில் ஒரு அலுவலகத்தை திறக்க பரிந்துரைப்பதாகவும் இந்திய வர்த்தக துறை அமைச்சர் ஃபியூஸ் கோயல் தெரிவித்தார்.


இந்தியாவில் 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக 2019 இல் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் கூறியிருந்தார்.


இந்த நிலையில், இப்பெரும் முதலீட்டை கொண்டு வருவதற்கான கூட்டு பணிக் குழுவை அமைக்க, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இருதரப்பிலும் ஒப்புகொள்ளப்பட்டது.


இந்தியாவின் IMEC திட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சௌதி அரேபியாவும் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன்கொண்ட ஆலையை மகாராஷ்டிர மாநிலத்தில் நிறுவ சௌதியும், ஐக்கிய அரபு அமீரகமும் 2018 இல் ஒப்புக்கொண்டன.


இருநாடுகளின் கூட்டு முயற்சியில் நிறுவ திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆலையை அமைப்பதில் உள்ள நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை இந்தியா தீர்க்க உள்ளது என்று சௌதி அமைச்சர் காலித் அல் ஃபலித் கூறினார்.


டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முதல் நாளில், ‘இந்தியா -மத்திய கிழக்கு- ஐரோப்பிய பொருளாதார வழித்தடம்’ (IMEC) திட்டத்தை, இந்திய பிரதமர் நரேந்திர மோதி முன்வைத்தார்.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சௌதி அரேபியாவும் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


பிரதமர் மோதி மற்றும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்புக்கு பின், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஒசாப் சயீத் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது IMEC திட்டத்தின் மூலம் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான இணைப்பு அதிகரிக்கப்படும். துறைமுகங்கள், ரயில் பாதைகள், சாலைகள் உள்ளிட்ட இணைப்புகள் தவிர, கண்ணாடி இழைப் பேழை இணைப்பு உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என்றும் சயீத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.