Header Ads



வெளிநாடு அனுப்புவதாக 10 இலட்ச ரூபாய் பண மோசடி - பிரதேச அரசியல்வாதிக்கு விளக்கமறியல்


கனடா அனுப்புவதாக சமூக வலைத்தளம் ஊடாக விளம்பரம் செய்து பெண்ணொருவரிடம் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான்  உத்தரவிட்டுள்ளது 


யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , கனடா அனுப்பி வைக்க முடியும் என சமூக வலைத்தளத்தில் வந்த விளம்பரம் ஒன்றினை நம்பி , விளம்பரத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு , விசாரித்த போது , கனடா அனுப்பி வைப்பதாக அப்பெண்ணுக்கு உறுதி அளித்துள்ளார். 


அதனை நம்பி , அந்த பெண் தொலைபேசியில் தன்னுடன் கதைத்தவருக்கு 10 இலட்ச ரூபாய் முற்பணமாக வழங்கியுள்ளார். 


தனது கனடா பயண ஒழுங்குகள் எதுவும்   நீண்ட காலமாக  நடைபெறாததால் , கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 


முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் காத்தான்குடியை சேர்ந்த , பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான 57 வயதுடைய நபரே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கண்டறிந்து ,காத்தான்குடியில் வைத்து அவரை கைது செய்தனர். 


கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் கொண்டு வந்து மேலதிக விசாரணைகளின் பின்னர்   யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (14) முற்படுத்திய வேளை   அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  

No comments

Powered by Blogger.